வாரணாசி கியான்வாபி மசூதியை பாதுகாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வேண்டுகோள்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இது, கோயிலின் ஒரு பகுதியை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதனால்மசூதியை தங்களிடம் ஒப்படைக்க அப்பகுதி இந்துக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இதுபோன்ற சர்ச்சைகளை தடுக்க பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 1991-ல் புனிதத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் நாடு சுதந்திரம் அடைந்த நாளில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே மாற்றமின்றி தொடர இச்சட்டம் வகை செய்கிறது.

இதில், வழக்கின் காரணமாக பாபர் மசூதிக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை சுட்டிக்காட்டி பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 2019 நவம்பரில் பாபர் மசூதி-ராமர் கோயில் வழக்கின் தீர்ப்புக்கு பிறகு பல்வேறு காரணங்களுடன் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் வாரணாசி கியான்வாபி மசூதியின் வெளிப்புற சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க கோரும் வழக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த விவகாரத்தில் மசூதியின் ஒசுகானாவில் சிவலிங்கமும், சுவர்களில்திரிசூலம், தேவிகளின் சிற்பங்களும் பதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. இதனால் மசூதியினுள் கோரப்பட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மொஹத்தசீம் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1992-ல் பாபர் மசூதிக்கு நிகழ்ந்தது போன்ற சூழல் மீண்டும் ஏற்படும் என அஞ்சுகிறோம். அகழாய்வில் எதிர்பாராமல் மசூதியின் உட்புற கட்டிடப் பாகங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வழிபாட்டு தலங்கள் மீதான சிறப்பு சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, கியான்வாபி உள்ளிட்ட எந்த மசூதிகள் மீதும் அகழாய்வு போன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது. எனவே, புனித்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை நிலைநிறுத்தி கியான்வாபி மசூதியை பாதுகாக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE