சாட்ஜிபிடியால் வேலை இழந்த கொல்கத்தா மாணவி வேதனை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சாட்ஜிபிடி மென்பொருள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமானது.

கல்வி, மருத்துவம், மார்க்கெட்டிங், நிரல் உருவாக்கம் தொடங்கி பல்வேறு துறைகளில் மிகப் பெரும் மாற்றங்களை சாட்ஜிபிடி ஏற்படுத்தி வருகிறது. இதனால், பலர் வேலை இழப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

“சாட்ஜிபிடி அறிமுகத்தால் என்னுடைய வேலையை இழந்துள்ளேன்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயதான சரண்யா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

“நான் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக எழுத்து துறை சார்ந்து வேலை பார்த்து வந்தேன். அதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதை வைத்து என்னுடைய வீட்டுச் செலவுகளை கவனித்து வந்தேன். ஆனால், தற்போது அந்த வேலை பறிபோகியுள்ளது. அதற்குக் காரணம் சாட்ஜிபிடி.

முன்பு எனக்கு ஒவ்வொரு மாதம் 10 கட்டுரைகள் எழுத எங்கள் நிறுவனத்திடமிருந்து வாய்ப்பு கிடைக்கும். இப்போது மாதம் ஒரு கட்டுரைக்குக்கூட வாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ளது சாட்ஜிபிடி மூலம் எங்கள் நிறுவனம் தங்களுக்குத் தேவையான கட்டுரையை உருவாக்கிக் கொள்கிறது.

இதனால், எனக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதன் விளைவாக என்னுடைய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எத்தனை துறைகளில் வேலை வாய்ப்பைப் பறிக்கும் என்பதை நினைத்தால் பெரும் அச்சம் எழுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக முறையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE