தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும் சட்டத்தின்படி ராகுல் குற்றவாளிதான் - பாஜக எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘மோடி' என்ற சமூகத்தின் பெயர் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்ததாகக் கூறி, பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரதுஎம்.பி. தகுதியிழப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

இதன் மூலம் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான் என்று புர்னேஷ் மோடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை பாஜக எம்பியுமான மகேஷ் ஜேத்மலானி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான். இருப்பினும் அதிகபட்ச தண்டனைக்கான காரணங்கள் போதுமானதாக இல்லாததால், ராகுல் காந்தியின் தண்டனைக்கான விளைவுகள், அதாவது தகுதி நீக்கம் போன்றவை நிறுத்தி வைக்கப்படும்.

தற்போது தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ராகுல்காந்தியால் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப முடியும். ஆனால் இது தொடர்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் போது ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படும் என நம்புகிறேன். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மிகவும் வலுவானவை. ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்க முடியாது. இவ்வாறு மகேஷ் ஜெத்மலானி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE