2015 முதல் 2019 வரை 30% நக்சல் தாக்குதல்கள் குறைந்துள்ளன: அமித் ஷா

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் நக்சல் தாக்குதல்கள் 30 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் நக்சல் தாக்குதல்கள் 30 சதவீதம் குறைந்துள்ளன. காவல் துறை சார்பில் நடத்தப்படும் என்கவுன்டர்கள் 32 சதவீதம் குறைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு 56 சதவீதம் குறைந்துள்ளது.

நக்சலிசத்துக்கு எதிரான போராட்டத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு ஒடிசா மாநில அரசு சிறப்பான ஒத்துழைப்பை அளித்துள்ளது. அதற்காக மாநில அரசுக்கு நன்றி. தேசிய நெடுஞ்சாலை 200-ல் காமாக்யா நகர் முதல் துபுரி வரையிலான 51 கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை ரூ.761 கோடி மதிப்பீட்டில் 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது என்பது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. கடந்த 9 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை வலுப்படுத்தாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். கடந்த 2014-15-ம் வருடத்தில் நாளொன்றுக்கு 12 கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 2021-22-ல் இது 29 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு 2014-ல் மாநிலங்களுக்கு வழங்கிய நிதி ரூ.1.14 லட்சம் கோடி. பாஜக தலைமையிலான தற்போதைய அரசு கொடுத்துள்ள நிதி ரூ.4.57 லட்சம் கோடி. பேரிடர் ஒரு மிகப் பெரிய பிரச்சினை. பேரிடர் மேலாண்மைக்காக மத்திய அரசு எடுத்துள்ள அனைத்து முயற்சிகளையும் ஒடிசா அரசு சிறப்பாக களத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் எவ்வாறு பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதற்கு ஒடிசா மிகச் சிறந்த உதாரணம். அதற்காக முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். கடந்த காலங்களில் ஒடிசா புயல்களால் அதிகம் பாதிக்கப்படும். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். ஆனால், தற்போது ஒருவர்கூட உயிரிழக்கும் நிலை என்பது இல்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE