“நூ கலவரம் திட்டமிட்ட சதி” - காரணங்களை அடுக்கி ஹரியாணா உள்துறை அமைச்சர் பேட்டி

By செய்திப்பிரிவு

சண்டீகர்: குன்றுகளின் மேலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது, கட்டடிடங்களின் மேல்மாடிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்கள் நூ வன்முறை முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துவதாக ஹரியாணா உள்துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஹரியாணா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் வெள்ளிக்கிழமை அம்பாலாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "நூ வன்முறை தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 102 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் தொடர்புடைய யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இது திட்டமிடப்பட்டு நடந்த சதி. அனைவரின் கைகளிலும் லத்தி இருந்திருகிறது. எங்கிருந்து அவை இலவசமாக வழங்கப்பட்டன? யாரோ சிலர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்திருக்கிறது. எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன. இந்த விஷயத்தின் அடியாழம் வரை நாங்கள் ஆராயப்போகிறோம்" என்றார்

குற்றவாளிகளின் சொத்துக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்தற்கு தேவையான இடங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தப்படும். புல்டோசர் என்பது சிகிச்சையின் ஒரு அங்கம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சைபர் கிரைம் காவல்நிலையம் தாக்கப்பட்டது குறித்து பேசிய அமைச்சர்,"இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் தீவிரம் காட்டி வருகிறோம். காவல் நிலையத்தை தாக்கியவர்கள் யார், அவர்கள் என்னென்ன ஆவணங்களை அழிக்க முற்பட்டார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவின் சைபர் கிரைமின் மையமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்படுகிறது. நூ இப்போது புதிய ஜம்தாராவாக மாறிவருகிறது.

ஏப்ரல் மாதத்தில், 5000 போலீஸார் வீடு வீடாக நடந்த சோதனையில் ஈடுபட்டனர். அதில் பல லேப்டாப்கள், ஆயிரக்கணக்கான சிம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்போது சைபர் க்ரைம் காவல் நிலையம் தாக்கப்பட்டுள்ளது. சைபர் குண்டர்கள் காவல்நிலையத்தை தாக்கி அங்குள்ள கணினிகளை சேதப்படுத்தி ஆவணங்களை அழிக்க முயன்றனரா என்ற விசாரணை தொடங்கியுள்ளது.

போலீசார் பொதுமக்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தும் . சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர். கலவம் தொடங்கிய திங்கள் கிழமை அந்த ஊர்வலத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தங்களிடம் உள்ள வீடியோக்கள் மற்றும் தகவல்களை போலீஸாருக்கு கொடுத்து உதவுமாறு நான் வேண்டுகிறேன். அதே கோரிக்கையை கலவரத்தின் போது அங்கு இருந்த மக்களிடமும் வைக்கிறேன் என்றார்.

மேலும், விஎச்பி ஊர்வலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல் குறித்து அதிகாரிகளுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது என்று சில காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டது என்று அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, என்ன மாதிரியான தகவல்கள் கொடுக்கப்பட்டன, யார் அதைப் பற்றி கூறினார்கள், இந்த விஷயங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பசுக் காவலர் மோனு மானேசாரை கைது செய்ய ஹரியாணா அரசு ஒத்துழைக்கவில்லை என்ற ராஜஸ்தான் அரசின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், " பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதில் காங்கிரஸ் முதல்வர்கள் பெயர்பெற்றவர்கள். நாடுமுழுவதும் அவர்கள் பொறுப்பற்ற தன்மையில் பேசி வருகிறார்கள். அவர்கள் வந்து மோனு மானேசரை வந்து கைது செய்யவேண்டியது தானே..யார் அவர்களை தடுத்தது. ஹரியாணா போலீஸாரும் பிற மாநிலங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்ய செல்கிறார்கள். எல்லோரும் ஒத்துழைக்கிறார்கள். நாங்களும் ஒத்துழைக்கிறோம்" என்றார்.

முன்னதாக, ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தக் கலவரம் குருகிராம் வரை பரவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE