திருப்பதி தேவஸ்தானம் நந்தினி நெய் கொள்முதலை நிறுத்தியது எப்போது?- சர்ச்சைக்கு முதல்வர் சித்தராமையா பதில்

By இரா.வினோத்


பெங்களூரு: திருப்பதி தேவஸ்தானம் கர்நாடக அரசின் நந்தினி நெய்யை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வாங்குவதை நிறுத்திவிட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் விற்பனை செய்யப்படும் 'நந்தினி' பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரித்த‌து. அதாவது ரூ.39-க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் பாலின் விலை ரூ.42 ஆக விலை உயர்ந்துள்ளது. அரை லிட்டர் பாலின் விலை ரூ.2 அதிகரித்துள்ளது. இதேபோல தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.

மோர் 200 மில்லி பாக்கெட் விலை ரூ.1 அதிகரித்துள்ளது. நெய் விலை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் பால் பொருட்களின் விலை பாக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வால் டீ, காபி, பால் உள்ளிட்ட‌வற்றின் விலை ரூ. 5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

இதனிடையே திருப்ப‌தி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது பால் பொருட்களின் விலை அதிகரித்ததால் திருப்பதி தேவஸ்தானம் கொள்முதலை நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், ''கர்நாடக காங்கிரஸ் அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நெய் விலை உயர்த்தியதன் மூலம் திருப்பதியில் லட்டு தயாரிப்புக்கு மறைமுகமாக இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நெய் கொள்முதல் நின்றுபோய் உள்ளது. இதனால் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, ஆன்மீக உறவும் பாதிக்கப்பட்டுள்ளது''என விமர்சித்தார்.

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, '' நந்தினி நெய் கொள்முதலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நிறுத்தவில்லை. அது கடந்த பாஜக ஆட்சியிலே நிறுத்தப்பட்டுவிட்டது. அதாவது ஒன்றரை ஆண்டுகளாக கர்நாடகாவின் நந்தினி நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. ஆனால் பாஜகவினர் உண்மையை மறைத்து, பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்''என்றார்.

இதனிடையே திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், '' கர்நாடகாவின் நந்தினி நெய் தரமானதாகவும் விலை குறைவானதாகவும் இருந்ததால் நீண்ட காலம் அதனை கொள்முதல் செய்தோம். ஆனால், கடந்த 2022ல் நெய் கொள்முதல் தொடர்பாக நடந்த டெண்டரில் கர்நாடகா பங்கேற்கவில்லை. அதனால் நந்தினி நெய் கொள்முதல் செய்யப்படவில்லை'' என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE