புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரி 11-வது நாளாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. இதற்கிடையே, டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான நேற்று காலை மக்களவை கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்ணியக் குறைவான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்ததாக கூறி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவைக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ராஜேந்திர அகர்வால் அவையை நடத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ‘‘மக்களவை தலைவர் ஓம் பிர்லா எங்களது பாதுகாவலர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் அவர் அவைக்கு திரும்ப வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி யினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
» ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | மாணவர்களுடன் போட்டியை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
» ஆக. 22 முதல் 24 வரையில் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பிற்பகலில் அவை கூடியபோது, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் ஆட்பேசம் தெரிவித்தனர்.
இதன்பிறகு, டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை நேரு, சர்தார் பட்டேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் உள்ளிட்டோர் எதிர்த்தனர். ஒருகாலத்தில் மத்தியில் காங்கிரஸும், டெல்லியில் பாஜகவும் ஆட்சி நடத்தின. அப்போது எந்த பிரச்சினையும் எழவில்லை. டெல்லியில் கடந்த 2015-ல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மோதலை மையமாக வைத்து ஆம் ஆத்மி ஆட்சி நடத்துகிறது.
பங்களா (முதல்வர் கேஜ்ரிவாலின் வீடு) விவகாரத்தில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆம் ஆத்மி அரசின் ஊழல் விவகாரங்கள் அம்பலமாகிவிடும் என்று அந்த கட்சித் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதன்காரணமாகவே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டெல்லியின் ஆட்சி, நிர்வாகம் தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா தொடர்பாக ஆளும் பாஜக - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணிஉறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இறுதியில்குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
விவாதத்தின்போது ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரிங்கு அவையின் மையப் பகுதிக்கு வந்து மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார். அவர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பிற்பகலில் ஓம் பிர்லா மக்களவைக்கு திரும்பி அவையை நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது பிரதமர் மோடிக்கு சாதகமாக அவைத் தலைவர் செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
இதற்கு ஜெகதீப் தன்கர் பதில் அளித்தபோது, “நான் யாரையும் பாதுகாக்கவில்லை. அரசமைப்பு சாசனத்தை பாதுகாக்கும் பணியை மட்டுமே மேற்கொள்கிறேன்’’ என்று கண்டிப்புடன் கூறினார்.
மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்புவிடுத்தார். பிற்பகல் 1 மணிக்கு இந்தகூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனியாக சந்தித்து அவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது கடற்கரை பகுதி கனிமங்கள் மேம்பாடு,ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago