தற்காலிக சட்டப்பிரிவு 370 எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப் பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று முன்தினம் தொடங்கியது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், ‘‘ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் பதவிக் காலம் கடந்த 1957-ம் ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு, அரசியல் சாசனத்தில் தற்காலிகம் என குறிப்பிடப்பட்ட 370-வது சட்டப்பிரிவு, எப்படி நிரந்தரமாக முடியும்? என கேள்வி எழுப்பினர்.

370வது சட்டப்பிரிவின் 3 வது உட்பிரிவில், ‘‘ இந்த சட்டப்பிரிவு முடிவுக்கு வருவதாக குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக சட்டசபையின் பரிந்துரை தேவைப்படலாம் என2-வது உட்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?என கபில் சிபிலிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கபில் சிபல், ‘‘சட்டப்பேரவையின் பரிந்துரை இல்லாமல், 370-வது சட்டப்பிரிவை குடியரசு தலைவர் ரத்து செய்ய முடியாது என்பதற்காகத்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கவாய், ‘‘1957-ம் ஆண்டுக்கு பிறகுஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த பின்பு 370-வது சட்டபிரிவவை எதுவும் செய்ய முடியாதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கபில் சிபல், ‘‘அரசியல் நடவடிக்கை மூலம் 370-வது சட்டப் பிரிவு தூக்கி எறியப்பட்டுள்ளது. இது அரசியல்சாசன நடவடிக்கை அல்ல. சட்டப் பேரவையின் பணியை, நாடாளுமன்றம் செய்து 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்துள்ளது. இதுபோல் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா?

இந்த விசாரணை நேற்றும் தொடர்ந்தது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE