டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா | குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்கள் பங்கேற்று விவாதித்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அப்போது டெல்லி ஆம் ஆத்மி அரசை அவர் சரமாரியாக விமர்சித்தார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி நீடித்தது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் தொடர்ந்து வலியுறுத்தின. பிரதமருக்குப் பதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளித்து பேசுவதற்கான திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

எனவே, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவை, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதில் உடன்பாடு எட்டப்படாததால், உணவு இடைவேளைக்குப் பிறகும் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. எனினும், மசோதாக்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் மசோதா 2023, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2023 ஆகிய மசோதாக்கள் உணவு இடைவேளைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.

மக்களவையிலும் அமளி நிலவியது. தொடக்கத்தில், அவைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வரவில்லை. அவருக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த ராஜேந்திர அகர்வால் அவையை நடத்தினார். அதிருப்தி காரணமாக ஓம் பிர்லா வராத நிலையில், அவர் அவைக்கு வர வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஓம் பிர்லா அவைக்கு வந்தார். எனினும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அவர் அவையில் இருந்தார். மணிப்பூர் விவகாரம் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு கூடிய மக்களவையில், டெல்லி அரசு திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் டெல்லி அரசு மசோதாவை நிறைவேற்ற நினைப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. கூட்டணி காரணமாக இந்த மசோதாவை தங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்றும் ஜனநாயக கூட்டாட்சித் தத்துவத்தைக் கருத்தில் கொண்டே ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மசோதா தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, சட்டப்பிரிவு 239AA-படி டெல்லி அரசிடம் இருந்து அதிகாரங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.

பாஜக தெற்கு டெல்லி எம்பி ரமேஷ் பிதூரி, திமுக எம்பி தயாநிதி மாறன், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜிவ் ரஞ்சன் சிங், பாஜக எம்பி பினாக்கி மிஷ்ரா உள்ளிட்டோர் டெல்லி அரசு மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.

தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி அரசை சரமாரியாக விமர்சித்தார். ஊழலில் திளைத்த டெல்லி அரசு தனது ஊழல்களை மறைக்கவே அதிகாரிகள் நியமன மசோதாவை எதிர்க்கிறது என்றார். அமித் ஷாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. டெல்லி தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்த பின்னணியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதே மத்திய அரசின் வாதமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE