“பாகிஸ்தானுடன் சுமுக உறவை இந்தியா விரும்புகிறது. ஆனால்...” - வெளியுறவு அமைச்சகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் சுமுக உறவு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது; ஆனால் அதற்கு பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழல் மிகவும் அவசியம் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கனிமவள உச்சிமாநாடு இஸ்லாமாபாத்தில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அண்டை நாடு உள்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. தீவிரமான விஷயங்களைப் பேசுவதற்கு அண்டை நாடும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், போர் தேவையற்ற ஒன்று. அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாம் சுமுகமான அண்டை நாடுகளாக மாற முடியாது. இதை அண்டை நாடும் புரிந்துகொள்வது முக்கியம்" என்று இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காட்டி இருக்கும் விருப்பம் குறித்த கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதில் அளித்தார். அப்போது அவர், “இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பேசிய பேச்சு குறித்த செய்தியை நாங்கள் பார்த்தோம். பாகிஸ்தான் உள்பட நாம் நமது அனைத்து அண்டை நாடுகளுடன் சுமுக உறவு மேற்கொள்ள விரும்புகிறோம். நமது இந்த நிலைப்பாடு தெளிவானது; அனைவரும் நன்கு அறிந்தது. ஆனால், அதற்கு பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழல் மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிப்பது, காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷெரீப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில், அவரது இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE