பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. திமுக எம்.பியான கனிமொழி எழுப்பியக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்த பதிலில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, குன்வர் டேனிஷ் அலி, அரவிந்த் கண்பத் சவந்த் ஆகியோர் எழுப்பியிருந்தனர். இந்த எம்.பிக்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) 'இந்தியாவில் குற்றங்கள்' என்ற வெளியீட்டில் குற்றங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

காணாமல் போன பெண்கள், காணாமல் போன சிறுமிகள், மீட்கப்பட்டவர்கள், இன்னமும் மீட்கப்படாதவர்கள் குறித்தான மாநிலம் தழுவிய விவரங்கள் 2016-ஆம் ஆண்டு முதல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள் (18 வயதுக்கு குறைந்தோர்) எண்ணிக்கை 2017இல் 75, 2018 இல் 90, 2019 இல் 88, 2020 இல் 112, 2021 இல் 144 என அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 2017இல் 191, 2018 ஆம் ஆண்டில் 195, 2019இல் 167, 2020 ஆம் ஆண்டில் 224, மேலும் 2021 ஆம் ஆண்டில் 369 என அதிகரித்திருக்கிறது.

போலீஸ் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநில அரசுகளின் பொறுப்பில் வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புலனாய்வு மற்றும் வழக்கு நடத்துவதும் மாநில அரசுகளின் பணியாக இருக்கிறது. குற்றவியல் நீதிமுறையை வலிமைப்படுத்தும் விதமாக புதிய சட்டங்களை இயற்றுதல், ஏற்கெனவே இருக்கும் சட்டங்களை திருத்தி வலிமைப்படுத்துதல் ஆகியவை ஓர் தொடர் நடவடிக்கையாக அரசாங்கத்தால் அந்தந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுமைக்கும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கான அவசரகால உதவிப் பொறிமுறையின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்ற எண்112 அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான அவசர நிலைகளில் இருந்தும் பெண்களுக்கு உதவி செய்வதற்கான கணினி அடிப்படையில் இந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி அமையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது பற்றி அறிவுரைகளை ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவை உள்துறை அமைச்சக https://www.mha.gov.in. இணையதளத்தில் கிடைக்கின்றன. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் காணாமல் போன வழக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை(எஸ்ஒபி)களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

காவல் துறை, குழந்தைகள் நலக் குழுக்கள் மற்றும் சிறார் சீர்திருத்த வாரியம் ஆகியவற்றுக்கு காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது மீட்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளைக் கையாள்வதற்கு உதவி, காணாமல் போன குழந்தைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் தொடர்பாக சேவைகளை இயக்கி வருகிறது

ரயில் நிலையங்களில் உதவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இதற்காக ஹெல்ப்லைன் எண். 1098 என்பது 24 மணிநேரமும் செயல்படுத்தி வருகிறது. இது தவிர ரயில்வே சைல்டு லைன் என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. முக்கியமான ரயில் நிலையங்களில் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காக இது இயக்கப்படுகிறது. மேலும், 'டிராக் சைல்டு போர்டல்' என்ற திட்டத்தையும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. காணாமல் போகும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.

பராமரிக்கும் உரிமை: இந்த திட்டத்தின் கீழ், காவல் நிலையங்கள், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு அந்த இணையத்தை பராமரிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் அவர்கள் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை போர்ட்டலில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். ட்ராக் சைல்ட் போர்ட்டலின் ஒரு கூறு "கோயா-பாயா(காணாமல் போய் கிடைத்தவர்கள்)' ஆகும், இதில் எந்த குடிமகனும் காணாமல் போன குழந்தைகளையும் அவர்கள் இருக்கும் இடத்தையும் பற்றி விரைவில் புகார் அளிக்கலாம்.

ஒன் ஸ்டாப் சென்டர்கள்: பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற திட்டத்தையும் நாடு முழுதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தனி இடங்களிலோ, பொது இடங்களிலோ வன்முறையால் பாதிக்கப்பட்டால் உடனடி மற்றும் சாதாரண உதவிகளை இந்த மையங்கள் செய்யும். போலீஸ், மருத்துவம், சட்டம் சார்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட உதவிகளை இந்த ஒன் ஸ்டாப் சென்டர்கள் மூலம் பெறமுடியும். வன்முறைக்கு எதிரான போராட்டத்துக்கான உளவியல் ஆலோசனையும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது'' என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE