‘பாரத மாதா வாஹினி’ தலைவர் கைது - ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை பரப்புவோர் மீது ஹரியாணா போலீஸ் அதிரடி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது ஹரியாணா போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்துத்துவா அமைப்பான ‘பாரத மாதா வாஹினி’ தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஹரியாணாவின் நூ பகுதியில் கடந்த திங்கள்கிழமை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ‘ஷோபா யாத்ரா’ எனும் பெயரில் ஓர் ஆன்மிக ஊர்வலம் நடத்தினர். இதை இதர சமுதாய இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தி இருந்தனர்.இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக உருவெடுத்தது. இதில் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. இக்கலவரம், அருகிலுள்ள குருகிராமுக்கும் பரவி அங்குள்ள மசூதிக்கு தீவைக்கப்பட்டது.

அம்மசூதியின் இளம் மவுலானா, 2 ஊர்காவல் படையினர், ஒரு முன்னாள் பஜ்ரங்தளம் நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரம் அருகிலுள்ள பல்வல், ஃபரீதாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காஜியாபாத்தில் சில பகுதிகளிலும் பரவியது. இதை அணையாவிடாமல் செய்ய பல சமூக விரோதிகள் ஆத்திரமூட்டம் காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதன் மீது ஹரியாணா காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது. இதுபோன்ற தவறானக் காட்சிப் பதிவுகளை சுமார் 50 ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து பரப்பியது தெரியவந்துள்ளது. இந்த போலிக் கணக்குகளை நடத்தி வந்தவர்களில் ஒருவராக இந்துத்துவா அமைப்பான ஜெய் பாரத மாதா வாஹினி எனும் அமைப்பின் தலைவரான தினேஷ் பாரதியை கைது செய்த போலீஸார், அவரை ஃபரீதாபாத் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஃபரீதாபாத் நகரின் காவல் துறை ஆணையர் விகாஸ் அரோரா கூறும்போது, ‘கலவரத்துக்கு பிறகு செக்டர் 53 காவல் நிலையத்தில் ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவாகின. இதில் செக்டர் 52-இல் வசிக்கும் தினேஷ் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலரை தேடி வருகிறோம்’ எனத் தெரிவித்தார். இதுபோல், ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் தினேஷ் பரப்புவதும், பேசுவதும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அதை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE