“மக்களவையின் காவலன் சபாநாயகர் மீண்டும் தலைமையேற்க வேண்டும்” - ஓம் பிர்லாவுக்கு காங். எம்.பி அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொடர்ந்து இரண்டாவது நாளாக அவை நடவடிக்கைகளை புறக்கணித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவைக்கு வந்து தலைமை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளில் மக்களவைக் கூடியதும் தொடங்கிய கேள்வி நேரத்தின்போது, பாஜக உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் அவையை வழிநடத்தினார். அவை தொடங்கியதும் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "மக்களவைக் கூடியதும் நாங்கள் அனைவரும் சபாநாயகரை தலைவர் நாற்காலியில் பார்க்க விரும்புகிறோம். அவைக்கு தலைமையேற்க சபாநாயகர் மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரிக்கை விடுக்கிறோம்.

மொத்த அவையும் சபாநாயகரை விரும்புகிறது. சபாநாயகரை அவைக்கு தலைமையேற்க மீண்டும் வரச் சொல்லுங்கள். என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அதனை தீர்த்துக் கொள்கிறோம். சபாநாயகர் எங்களின் பாதுகாவலர். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் எங்கள் கருத்துகளை அவர் முன்பு தெரிவிப்போம்" என்று தெரிவித்தார். அவையை வழிநடத்திய ராஜேந்தி அகர்வால், இந்த செய்தி சபாநாயகரிடம் உரிய முறையில் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த சவுகதா ரே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத கட்சித் தலைவர் சுப்ரிய சுலே, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ஆர்எஸ்பியை சேர்ந்த பிரேமசந்திரன் உள்ளிட்டோர் சபாநாயகரை அவரது அறையில் நேரில் சென்று சந்தித்த அவையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவையில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பிக்களும் அவையில் கூச்சலிடுகின்றனர். இது நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தொடர் கதையாக நடைபெற்று அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் நாடாளுமன்றத்தில் அமைதி நிலவவில்லை. இந்த நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை மசோதாக்களை நிறைவேற்றிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் வரை மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை மக்களவைத் தொடங்கியபோது சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை நடத்தினார். அதேபோல அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் உறுப்பினர்களின் செயல்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE