மணிப்பூர் வன்முறை | ஐகோர்ட் விசாரணைக்குப் பின் ‘மாஸ் நல்லடக்க’ முடிவை தள்ளிவைத்த பழங்குடியினர்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் பலியான குகி ஸோ இனத்தைச் சேர்ந்த 35 பேரை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யும் ஐடிஎல்எஃப் அமைப்பின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை அதிகாலை 6 மணிக்கு உயர் நீதிமன்றம் விசாரித்தது.

ஐடிஎல்எஃப் அமைப்பின் இந்த அறிவிப்புக்கு கோகோமி அமைப்பு (மணிப்பூர் அமைதி ஒருங்கிணைப்பு குழு) எதிர்ப்பு தெரிவித்தது. 35 உடல்களை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யும் குகி ஸோ அமைப்பின் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது பிற இனத்தவரின் உணர்வுகளைத் தூண்டும், மீண்டும் கலவரத்துக்கு வித்திடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மகளிர் அமைப்புகள் சில பிஷ்ணுபூர் துணை ஆணையர் அலுவலகம் முன்னர் திரண்டு உடல்கள் அடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.

இம்பால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்வி முரளிதரன் இந்த வழக்கை விசாரித்தார். இதனையடுத்து ஐடிஎல்எஃப் அமைப்பு நல்லடக்க நிகழ்வை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்தது.

35 உடல்கள் ஒரே இடம்... - முன்னதாக, கடந்த மே 3 தொடங்கி இதுவரை உயிரிழந்த குகி ஸோ இனத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. இதனை ஒட்டி இந்த வழக்கை அதிகாலையிலேயே விசாரித்த நீதிபதி மாநில போலீஸார், மத்தியப் படைகள் 35 உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ள சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் ஹாலாய் கோப்பி கிராமத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த அமர்வில் நீதிபதி ஏ.ஞானேஸ்வர் சர்மாவும் இடம்பெற்றிருந்தார். விசாரணையின்போது அவர் உடல்கள் புதைக்கப்படவுள்ள இடத்தில் சட்டம் - ஒழங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்துக் கட்சிகளும் அரசும் இணைந்து சுமுகமாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குகி ஸோ மக்கள் நல்லடக்கத்துக்கான நில ஒதுக்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் என்று தெரிவித்தார்.

ஐடிஎல்எஃப் அறிக்கை: இதற்கிடையில், ஐடிஎல்எஃப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சர் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று நாங்கள் ஐந்து நாட்களுக்கு நிகழ்வை ஒத்திவைத்துள்ளோம். மிசோரம் முதல்வரும் எங்களிடம் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், இன்னும் 5 நாட்களில் எங்களுக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் நாங்கள் திட்டமிட்டபடி நல்லடக்க நிகழ்வை நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE