ஆந்திர சந்தையில் கிலோ தக்காளி ரூ.224-க்கு ஏலம்

By என்.மகேஷ்குமார்


திருப்பதி: ஆந்திர மாநிலம் மதனபல்லி தக்காளி சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 224-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

தக்காளி விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்துள்ளது. இதனால் தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் சிலர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறி வருகின்றனர். ஆனால், தக்காளி விலை எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், மதனபல்லி தக்காளி சந்தையில் நேற்று 10 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. அப்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 5,600-க்கு வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். இதன்படி பார்த்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.224 என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், அனந்தபூர் மாவட்டம், குரபலகோட்டா தக்காளி சந்தையில், நேற்று 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ. 3,200-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி இங்கு ரூ. 215 ஆக உள்ளது. குரபல கோட்டா தக்காளி சந்தை வரலாற்றில் இவ்வளவு தொகைக்கு தக்காளி ஏலம் போனது இதுவே முதல்முறை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE