மணிப்பூர் இனக் கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய பழங்குடி அமைப்பு திட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் இனக் கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் இன்று (ஆக.3) நல்லடக்கம் செய்யவுள்ளதாக பழங்குடி இன அமைப்பான ஐடிஎல்எஃப் அறிவித்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கி மைத்தேயி - குகி இனத்தவர் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஐடிஎல்எஃப் என்றழைக்கப்படும் பூர்வக்குடி தலைவர்கள் பலர் இணைந்த கூட்டமைப்பு கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் சடலங்களை இன்று (வியாழக்கிழமை) ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யவுள்ளதாகத் அறிவித்துள்ளது. அது வால் ஆஃப் ரிமம்ப்ரன்ஸ் (Wall of Remembrance) நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

குகி - ஸோ பழங்குடியினப் போராளிகள் உடல்கள் இன்று காலை 11 மணியளவில் சூரச்சந்த்பூர் - பிஷ்னுபூர் எல்லையில் உள்ள எஸ்.போல்ஜாங் கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ஐடிஎல்எஃப் அமைப்பின் இந்த அறிவிப்புக்கு கோகோமி அமைப்பு (மணிப்பூர் அமைதி ஒருங்கிணைப்பு குழு) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 35 உடல்களை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யும் குகி ஸோ அமைப்பின் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது பிற இனத்தவரின் உணர்வுகளைத் தூண்டும், மீண்டும் கலவரத்துக்கு வித்திடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் அமைப்புகள் சில பிஷ்ணுபூர் துணை ஆணையர் அலுவலகம் முன்னர் திரண்டு உடல்கள் அடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை முதல் மாநில அரசு பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில போலீஸார், அதிரடிப் படையினர், அசாம் ரைஃபில்ஸ் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலவரம் பற்றி அறிந்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நல்லடக்கம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளும் ஐடிஎல்எஃப் குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 35 உடல்களை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு மாநிலத்தில் திரும்பிவரும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE