டெல்லி அவசர சட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு: அர்விந்த் கேஜ்ரிவால் அரசுக்கு பின்னடைவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு பிஜு தளம் கட்சியை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது பாஜக கூட்டணி அரசுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

டெல்லி அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், இடமாறுதல் உள்ளிட்ட அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவசர சட்டத்துக்கு எதிராக பிற கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டி வந்தார்.

இந்நிலையில் அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டு விடும்.

எனினும் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் நேற்று முன்தினம் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 9 எம்.பி.க்கள் உள்ள நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

இந்நிலையில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப் போவதாக ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும் அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த இக்கட்சி கடந்த 2018-ல் கூட்டணியை விட்டு விலகியது. பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 3 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

ஒய்எஸ்ஆர் ஆதரவு: ஆந்திராவின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் 9 எம்.பி.க்களும் உள்ளனர். இக்கட்சித் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டார்.

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்டம் நிறைவேற 121 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப் படுகிறது.

127 எம்.பி.க்கள் ஆதரவு: பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவால் பாஜக கூட்டணி அரசுக்கு மாநிலங்களவையில் 127 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் டெல்லி அவசர சட்ட மசோதா எளிதில் நிறைவேற வாய்ப்புள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் இண்டியா கூட்டணியினர் மற்றும் சில சுயேச்சைகள் உட்பட சுமார் 109 எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்