காஷ்மீருக்கு 1.27 கோடி சுற்றுலா பயணி வருகை: துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா புத்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நடப்பாண்டில் இதுவரையில் 1.27 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுத்துள்ளதன் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. இதையடுத்து, கடந்தாண்டை விட நடப்பு 2023-ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வரலாற்று உச்சத்தைத் தொடும்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்த சூழ்நிலைகள் தற்போது மாறியுள்ளன. இதனால், வணிக அங்காடிகள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி வழக்கமான முறையில் செயல்படும் நிலை இன்று உருவாகியுள்ளது.

முந்தைய காலக்கட்டங்களில் நிலவிய நிச்சயமற்ற தன்மையால் ஆட்டோ ரிக்ஸா தொழிலாளர்கள் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் வரை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். ஆனால், தற்போது நாம் அந்த துயர நிலையிலிருந்து வெளியேறிவிட்டோம்.

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொருளாதாரம் சிறப்பான அளவில் மேம்பாடு கண்டுள்ளது. இவ்வாறு மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE