சட்டப்பிரிவு 370 ரத்து மீதான விசாரணை | ஆய்வுக்குரிய 4 அம்சங்கள் - உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் முன்வைத்த வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையை இன்று தொடங்கியது.

இனி இந்த விசாரணை, திங்கள்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் தினசரி அடிப்படையில் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக, எழுத்துபூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்ய ஜூலை 27-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதத்தை அறிக்கைகளாக ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் வாதம் இன்று தொடங்கியது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இது ஒரு வரலாற்றுத் தருணம்” என குறிப்பிட்டார். அவர் தனது வாதத்தில் முன்வைத்தவை: “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டதால் இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி கிடையாது. அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கு முன் அம்மாநில சட்டமன்றம் முடக்கப்பட்டது. இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் அதேவேளையில், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மனுதாரர் உறுதியாக இருக்கிறார். அது நேற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது; இன்றும் அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது; நாளையும் அது அவ்வாறே இருக்கும் என்பதே மனுதாரரின் நிலைப்பாடு.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்த இந்த வழக்கில் 4 சட்ட அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 1. இந்திய அரசியல் சாசனம், 2. இந்திய அரசியல் சாசனம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக்கூடிய விவகாரம், 3. ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனம், 4. சட்டப்பிரிவு 370.

இந்திய அரசியல் சட்டங்கள் அனைத்துமே ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தக்கூடிய வகையில் காலப்போக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துடன் இணைந்தே உள்ளது. அப்படி இருக்கும்போது, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

ஜம்மு காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பை அடுத்து மவுன்ட்பேட்டன் பிரபுவுக்கு மகாராஜா ஹரிசிங் எழுதிய கடிதம் இருக்கிறது (கடிதத்தை கபில் சிபில் படிக்கிறார்). ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறு வழியில்லாமல்தான் அவர் அந்த முடிவை எடுத்துள்ளார். 1948, மார்ச் 5-ம் தேதி இடைக்கால அரசை மகாராஜா பிரகடனப்படுத்தினார்.

அரசியல் நிர்ணய சபைதான் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்தது. அதன் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு ஏற்ப அரசியல் சாசன சபை தொடரும் என்ற புரிதல்தான் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இருந்தது. எனவே, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன் அரசியல் சாசன சபையின் பரிந்துரையைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், 1950-ல் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களே அப்படித்தான் நினைத்தார்கள். அதை எப்படி மாற்ற முடியும்?” என வாதிட்டார்.

கபில் சிபிலின் வாதம் தொடர்ந்த நிலையில், அவரிடம் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி எஸ்.கே. கவுல் உள்ளிட்டோர் குறுக்கு கேள்விகளைக் கேட்டனர். இது குறித்த வாதம் நாளையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE