டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா - மக்களவையில் எதிர்ப்புக்கிடையே தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் மசோதா மக்களவையில் இன்று கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இந்நிலையில், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றும் நோக்கில் அதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்.கே. பிரேமசந்திரன், சசி தரூர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. டெல்லி தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்த பின்னணியிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன" என தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் பேசிய அக்கட்சியின் எம்பி பினாகி மிஸ்ரா, "சட்டத்துக்கு உட்பட்டே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வாக்களிக்கலாம். ஆனால், இது சட்டப்படியானது அல்ல என கூற முடியாது" என குறிப்பிட்டார்.

அவசர சட்டத்தின் பின்னணி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதாக இந்த மோதல் முற்றியது. இதையடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் என்பதை உறுதிப்படுத்தக் கோரி ஆளும் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், டெல்லியின் அதிகாரம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றும், வேண்டுமானால் இவ்விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இதையடுத்து, தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ)உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE