புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் இரு அவைகளும் இன்றும் (திங்கள்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சினிமோட்டாேகிராஃப் திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்காக காலையில் இரண்டு அவைகளும் கூடின. மக்களவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து பதாகைகளை எந்திய படிய "மணிப்பூர்...", "மணிப்பூர்..." என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளி காரணமாக மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மதியம் இரண்டு மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமளிக்கு இடையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் சினிமோட்டோகிராஃப் திருத்த மசோதா 2023-ஐ தாக்கல் செய்தார். முழக்கங்களுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மாநிலங்களவையில் ஜூலை 27-ம் தேதி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: அதேபோல் திங்கள்கிழமை நான்கு ஒத்திவைப்பைச் சந்தித்த மாநிலங்களவை இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மாநிலங்களவையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் பேசிய சபைத் தலைவர் பியூஸ் கோயல், மணிப்பூர் விவாகரம் தொடர்பாக அரசு விவாதம் நடத்த தயார் என்று கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் ஏன் ஓடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத்தின் இவ்வளவு நாட்களை எதிர்க்கட்சிகள் வீணடித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், மணிப்பூர் குறித்த விவாதம் இன்று நடைபெற வேண்டும். மதியம் 2 மணிக்கு விதி 267-க்கு பதிலாக விதி 176-ன் கீழ் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
» நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன: அனுராக் தாக்குர் விமர்சனம்
பியூஸ் கோயலின் பேச்சுக்கு பதில் அளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாளுமன்றத்தில் வந்து பேச வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இதனால், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையில் சுமுக முடிவு ஏற்படாததால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 12 மணிக்கு கூடிய மாநிலங்களவை தொடர்ந்து 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஒத்திவைப்புகளுக்கு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
8 -வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் டெல்லி சேவைகள் மசோதா, வன திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் இனக்கலவரம், மத்திய அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுத்துதல், டெல்லி அவசர சட்டம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தன.
இதனிடையே கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் ஜூலை 19-ம் தேதி மணிப்பூர் கலவரத்தின் போது மே 4-ம் தேதி மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்றால் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ ஒன்று பரவி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். இதுகுறித்து இரு அவைகளிலும் விதி 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றன.
அதற்கு அரசு மணிப்பூர் விவாகாரம் குறித்து விதி 176-ன் கீழ் விவாதிக்க தயாராக இருக்கிறது என்று கூறிவருகிறது. இந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மோதல்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து 8 -வது நாளாக இன்றும் முடங்கியது. இன்றைய கூட்டத்தில் டெல்லி சேவைகள் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
அனுராக் தாக்குர் கேள்வி: புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், "மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். எனவே, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாடாளுமன்றத்துக்குள் பிரச்சினைகளை எழுப்பாமல் வீதியில் கோஷமிடுவது சரியா? அப்படியானால், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்ன பயன்? நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து ஓட வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வந்தது?
விவாதத்தில் பங்கேற்காமல் ஓடிவிட்டு, அதற்கான காரணத்தை எதிர்க்கட்சிகள் தேடுகின்றன. அவர்களுக்கு வெளியே ஓடுவதில்தான் நம்பிக்கை இருக்கிறது; விவாதத்தில் இல்லை. அவர்கள் செய்தியில் இடம்பெற விரும்புகிறார்கள். ஆனால், விவாதத்தில் பங்கெடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் அவர்கள் அரசியல் செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது" என்று குற்றம்சாட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago