மணிப்பூர் வைரல் வீடியோ |  உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை - பாதிக்கப்பட்ட பெண்கள் புதிதாக மனு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் வைரல் வீடியோ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களையும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கின்றது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இரண்டு இளம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்தின் பதில் மீது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மைத்தேயி சமூக ஆண்கள் கும்பல் ஒன்றால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று கடந்த புதன்கிழமை (ஜூலை 19) வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிகழ்வால் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும், அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிடுமாறும் அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரத்தில் அரசு மிகவும் தீவிரத்துடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மணிப்பூர் வழக்கை சிபிஐ விசாரணை ஏற்றது. இதனையடுத்து இன்று மணிப்பூர் வைரல் வீடியோ விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE