மும்பை | ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொலை செய்த ஆர்பிஎஃப் காவலர் கைது

By செய்திப்பிரிவு

மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓடும் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார் காவலர்.

மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடக்கம். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்டபிள் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்கட்ட தகவலின்படி, ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் சேத்தன் சிங்க்கும், அவருடன் பயணித்த சப்-இன்ஸ்பெக்டரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை சமாதானம் செய்ய சக பயணிகள் முயன்ற சமயத்தில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார் கான்ஸ்டபிள் சேத்தன் சிங். எனினும் அவரை விரைவாகவே ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE