பாஜக பொதுச் செயலாளராக அனில் அந்தோணி நியமனம் - பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களை, முன்னெடுத்து செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்று பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் அந்தோணி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி. பிரதமர் மோடிக்கு எதிராக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதை வைத்து கடும் விமர்சனங்கள் செய்து வந்தார். ஆனால், அனில் அந்தோணி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் அனில் அந்தோணியை கடுமையாக சமூக வலைதளங்களில் வசை பாடினர். அத்துடன் மிரட்டல்களும் விடுத்தனர். இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய அனில் அந்தோணி, திடீரென பாஜக.வில் சேர்ந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளராக அனில் அந்தோணி நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டு நாடு நூற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை, திட்டங்களுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து செல்வதற்கு வாய்ப்பாக இந்த தேசிய பொதுச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க பாடுபட ஆர்வமாக இருக்கிறேன்.

அனைவருக்கும் நன்றி: என் மீது நம்பிக்கை வைத்து பொதுச் செயலாளர் பதவி தந்து என்னை பாஜக கவுரவப்படுத்தி உள்ளது. அதற்காக பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற தலைவர்களுக்கு பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்தில் எனக்கு ஆதரவளிப்பவர்கள், வழிகாட்டு பவர்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

இந்த ஆண்டு பாஜக.வுக்கு மிக முக்கியமானது. அடுத்த 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் என்று பாஜக.வுக்கு நிறைய சவால்கள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற பாஜக.வில் உள்ள ஒவ்வொருவரும் முழுமையாக பாடுபட வேண்டும். இவ்வாறு அனில் அந்தோணி கூறினார்.

இந்த ஆண்டுக்குள் ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாஜகநிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டனர். அந்த பெயர் பட்டியலை பாஜக தலைமை கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. அதில் அனில் அந்தோணி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE