கேரளாவில் 5-வயது சிறுமி கொலையில் நடந்து என்ன?: கைதான பிஹார் இளைஞர் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

அலுவா: கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் 5-வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் கொச்சி மாவட்டம், அலுவா பகுதியில் உள்ள மொகத் பிளாசாவில் பிஹாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவர் சில நாட்களுக்கு முன்பு வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், அருகில் வசித்த பிஹார் தொழிலாளர்களின் 5-வயது சிறுமியிடம் அசாஃபக் அலாம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பேச்சு கொடுத்துள்ளார்.

அந்த குழந்தையிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, அலுவா மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்றார் அசாஃபக் அலாம். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்தவர்கள், இந்த குழந்தை யார் என அசாஃபக் அலாமிடம் சிலர் கேட்டுள்ளனர். அவர்களிடம் தனது மகள் என்றும், மார்க்கெட் பகுதியை சுற்றிக் காட்டுவதாகவும் அலாம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அன்று மாலை 7 மணியளவில் தங்களின் 5-வயது மகளை காணவில்லை என பிஹார் புலம்பெயர் தொழிலாளர் தம்பதியினர் அலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிறுமி வசிக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவை போலீஸார் ஆய்வுசெய்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.03 அளவில் அந்த சிறுமியை ஒரு இளைஞர் அழைத்துச் செல்கிறார். அன்று இரவு 9.30 மணியளவில், அந்த இளைஞர் மது போதையில் சுற்றித் திரிந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் பிஹாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பது விசாரணையில் தெரிந்தது. அவர் சிறுமி பற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்தார். மறுநாள் காலைபோதை தெளிந்ததும் சிறுமியை கடத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சிறுமியின் உடலை வீசிய இடத்தை காட்டவும் சம்மதித்தார்.

அலுவா மார்க்கெட் குப்பை கிடங்கில் இருந்து சிறுமியின் உடல் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன. உடலின் அருகே 3 கற்களும் இருந்தன. உடல் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சிறுமியை கழுத்தை நெறித்து அசாஃபக் அலாம் கொலை செய்துள்ளார். உடலில் பல கொடூர காயங்கள் இருப்பதால் பாலியல் துன்புறுத்தலுக்கும் சிறுமி ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை: அசாஃபக் அலாம் மீது கடத்தல், கொலை, பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் சகீர் என்பவர் உட்பட மற்றவர்களிடம் குழந்தையை ஒப்படைத்ததாக அலாம் கூறியிருந்தார். இதனால் அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அசாஃபக் அலாமின் குற்ற பின்னணி குறித்து பிஹார் போலீஸாரிடமும் கேரள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க> மன்னித்துவிடு மகளே.. - பாலியல் வன்கொடுமை, படுகொலை; 5 வயது சிறுமிக்காக வருந்திய கேரள போலீஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE