தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது! - படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் ஹர்திக் படேல் நேர்காணல்

By டி.எல்.சஞ்சீவி குமார்

குஜராத் அரசியலின் ‘Most wanted’ இளைஞர் ஹர்திக் படேல். வயது 25 மட்டுமே. குஜராத்தின் பெரும்பான்மை மற்றும் ஆதிக்க சமூகமான படேல் சமூகத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுபவர். இரு ஆண்டுகளுக்கு முன்பு இவரது ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்ததில் அகமதாபாத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் படேல் சமூகத்தினர் திரண்டனர். கூடவே கலவர பூமியானது அகமதாபாத். 12 பேர் வரை கொல்லப்பட்டனர். இப்போதும் இவர் கூட்டும் சிறு கூட்டங்களுக்குக்கூட ஐந்தாயிரத்துக்கும் குறையாத படேல் சமூகத்தின் இளைஞர்கள் கூடுகிறார்கள். தங்களது இடஒதுக்கீட்டு கோரிக்கையை ஏற்றுகொண்டதற்காக குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், செளராஷ்டிரா, கட்ச் என இடைவிடாமல் சுற்றிக்கொண்டிருப்பவரை அவரது மதிய உணவு இடைவேளையில் ‘தி இந்து’-வுக்காக சந்தித்தோம். குஜராத்தி மற்றும் ஹிந்தி மட்டுமே பேசிய அவரது சந்திப்பிலிருந்து...

குஜராத்தின் முன்னேறிய சமூகம் படேல் என்கிற படிதார் சமூகம். அரசியல், விவசாயம், தொழில் துறை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் படேல் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் நீங்கள் இடஒதுக்கீடு கேட்பது நியாயமா?

தேசிய அளவில் எங்களைப் பார்க்கும் மேலோட்டமான பார்வை இது. நாங்கள் பெரும்பான்மை சமூகம் என்பது மட்டுமே உண்மை. குஜராத்தில் நாங்கள் 1.8 கோடி பேர் இருக்கிறோம். தேசிய அளவில் 27 கோடி பேர். ஆனால், எங்களில் எத்தனை பேரின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது என்பதுதான் கேள்வி. படேல் சமூகத்தினரா... அவர்களுக்கென்ன பண்ணையாளர்கள்... இப்படிச் சொல்லிச் சொல்லியே எங்களை அரசுகள் உள்ளிட்ட அமைப்புகள் புறக்கணிக்கின்றன. முன்னேறிய சமூகம் என்பது அனைத்து படேல் சமூக மக்களுக்கும் பொருந்தாது. இப்போதுகூட கிராமங்களுக்கு வாருங்கள், நொடித்துப்போன லட்சக்கணக்கான விவசாயிகளைக் காட்டுகிறேன். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்ட படேல் சமூகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களைக் காட்டுகிறேன். பாய் சாப்... பத்திரிகையாளர் என்றில்லை, நாடு முழுவதும் எங்கு சென்றாலும் இந்தக் கேள்வி மட்டுமே எங்களை குறி வைத்துத் துரத்துகிறது. தயவு செய்து எங்கள் சமூகத்துக்கு உள்ளே வந்து பாருங்கள். உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

உள்ளே வந்து பார்த்துவிட்டுதான் கேட்கிறோம் ஹர்திக். இன்றும் நாடு முழுவதும் உங்கள் சமூகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் 117 பேர் இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு சட்டசபை உறுப்பினர்கள் படேல் சமூகத்தினர். குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் அதிகாரம் செலுத்துபவர்களில் கணிசமானோர் படேல் சமூகத்தினர். நிலைமை இப்படி இருக்கும்போது நீங்கள் இடஒதுக்கீடு கேட்டுப் போராடினால் எதிர்காலத்தில் இது நமது நாட்டில் இடஒதுக்கீடு என்பதையே இல்லாமல் செய்யும் மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தி விடாதா?

நாங்கள் ஜாட் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் என எதனுடைய உரிமையையும் பறிப்பதற்காகப் போராடவில்லை. இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்வது என்பது மிகப் பெரும் சமூக அநீதி என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் அரசியல் சாசன சட்ட ரீதியாக பிரிவு 31 மற்றும் 46 இதன் வழியே எங்களுக்கான இடஒதுக்கீட்டை கேட்கிறோம். மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கவனமுடன் மறு பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் மூலம் எங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதையும் ஏன் கேட்கிறோம் என்றால் எங்கள் சமூகத்தில் ஒருபகுதியினர் மட்டுமே அதிகாரங்களில் இருக்கிறார்கள். இவ்வாறு அதிகாரத்தில் இருப்பவர்களால் எங்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. குஜராத்தின் அரசுகள் எங்களின் வளர்ந்த ஆட்களைக் கொண்டே எங்களை ஒடுக்கிக்கொண்டிருக்கின்றன.

எந்த அரசாங்கம் ஒடுக்கியது, காங்கிரஸா, பாஜகவா எந்தக் காலகட்டத்தில் உங்கள் சமூகம் ஒடுக்கப்பட்டது?

நிச்சயமாக பாஜக ஆட்சியில்தான் ஒடுக்கப்பட்டோம். எங்களில் சில பேருக்கு மட்டுமே ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு பெரும்பான்மையான படேல் சமூக அடித்தட்டு மக்களின் மொத்த வாக்குகளையும் பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அபகரித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ‘லாலி பாப்’ மிட்டாயைப் போல எங்களை சப்பி சுவைத்துவிட்டு தூக்கி எறிந்துவிடுகிறது பாஜக.

ஒடுக்கப்பட்டீர்கள் எனில் எந்த வகையில் ஒடுக்கப்பட்டீர்கள்?

வேலைவாய்ப்பில், கல்வியில் ஒடுக்கப்பட்டோம். குஜராத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் படேல் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 50 லட்சம் விவசாயிகள் நொடித்துக் கிடக்கிறார்கள். எங்கள் சமூகத்தின் கிராமப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருகிறது. குறிப்பாக மோடி ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்படுவது அதிகமானது. குஜராத்தின் பெரும்பான்மைத் தொழில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு. பல ஆயிரம் கோடிகள் புரளும் தொழில் அது. ஆனால், அவை அனைத்தும் தனியார் மயம். இயந்திர மயம். ஆட்களுக்கு அங்கே வேலை இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் மாருதி, ஹோண்டா, ஹீரோ இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஃபோர்டு, பம்பார்டியர் ரயில்வே கோச் உற்பத்தி நிறுவனம் என ஐந்தாறு நிறுவனங்கள் மட்டுமே இங்கு வந்திருக்கின்றன. டாடா, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை மூடப்பட்டுவிட்டன. இவை எவற்றிலும் பெரியதாக வேலைவாய்ப்பு கிடையாது. அதனால்தான் நாங்கள் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு கேட்கிறோம். இடஒதுக்கீடு இல்லாததால் அதுவும் கிடைக்கவில்லை.

குஜராத் பாஜக-வின் ஆட்சிக் காலத்தில் முன்னேறிய மாநிலம், நாட்டின் முன்மாதிரி மாநிலம் என்பது உண்மையா?

நிச்சயமாகக் கிடையாது. உண்மையை சொல்லப் போனால் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பாரம்பரியமான அதன் தொழில் சமூகங்களால் உருவானது. கடந்த 30 ஆண்டுகளாகவே குஜராத் அதன் இயல்பிலேயே படிப்படியாக முன்னேறி வருகிறது. அதுவும் நகரப்புறங்களில் மட்டுமே அந்த வளர்ச்சியைக் காண முடியும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் எங்கள் முன்னோர் நட்ட மரத்தின் கனிகளை மோடி மார்க்கெட்டிங் உத்தியைக் கையாண்டு தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார். முன்மாதிரி மாநிலம், வளர்ந்த மாநிலம் என்பதெல்லாம் மோடி அள்ளிவிடும் கவர்ச்சிகரமான பொய்களில் ஒன்று.

குஜராத்தில் சாதியத்தை காங்கிரஸ் வளர்த்துவிடுகிறது என்கிறது பாஜக. உண்மையில் சாதியத்தை இங்கே வளர்த்துவிடுவது யார்?

சந்தேகமே இல்லாமல் பாஜகதான். காலம் காலமாக சாதிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டே அந்தக் கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வருகிறது. எங்கள் படேல் சமூகத்திலும் அதுதானே நடந்தது. குஜராத்தின் வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக துரோகம் இழைக்கப்பட்ட இனம் படேல் இனமாக மட்டுமே இருக்க முடியும்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் பற்றிப் பேசுவோம். வருகிற தேர்தலைப் பொறுத்தவரை உங்கள் நோக்கம் என்ன?

எங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எங்களது ஒரே இலக்கு, படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு பெறுவது. அதற்கு பாஜக இங்கே தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த முறை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-வுக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்.

நேரடியாக சொல்லுங்கள், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துவிட்டீர்கள்தானே?

முதலில் ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ ஓர் அரசியல் கட்சி அல்ல, அதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு சமூக அமைப்பு மட்டுமே. மேலும் காங்கிரஸ் கட்சியுடன் இடஒதுக்கீட்டைத் தவிர நாங்கள் வேறு எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி என்பதெல்லாம் அடிப்படையற்ற கட்டுக் கதைகள். சுமார் ஒரு மாதமாக இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே அந்தக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுக்கான நியாயமான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை அந்தக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. தனது தேர்தல் அறிக்கையிலும் அதனை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

ஒரு பெண்ணுடன் உங்களை இணைத்து சமீபத்தில் வெளியான வீடியோ குறித்து உங்கள் கருத்து என்ன?

பாஜக செய்யும் அருவருக்கத்தக்க அரசியல் அது. அதை வேறு ஏதோ ஒரு நாட்டிலிருந்து அப்லோடு செய்ததிலிருந்தே அவர்களின் லட்சணம் தெரியவில்லையா. தவிர அந்த வீடியோவும் உண்மையில்லை. அவர்கள் என்னை அவமானப்படுத்தவில்லை. குஜராத்தின் பெண்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

பாஜக உங்களிடம் பேரம் பேசியதாக கூறுகிறீர்கள், என்ன பேசினார்கள், விபரமாகக் கூற முடியுமா?

எங்கள் தரப்பிடம் ஒரு மூத்த அதிகாரியைக் கொண்டு பேசினார்கள். ரூ.1,200 கோடி கொடுப்பதாகவும் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். இதற்கு மேல் விபரமாகக் கூற இயலாது.

தமிழக அரசியலைப் பற்றி ஏதேனும் அறிவீர்களா?

குஜராத்தில் ஒருகட்சி ஆட்சி நடந்துவருகிறது. அங்கே திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்துகின்றன. இப்போதுகூட பாஜக கட்சிதான் தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது என்று கேள்விப்பட்டேன். தவிர, சிரஞ்சீவி, ரஜினி, கமல் எல்லாம் அங்கே அரசியல் செய்வதாக அறிகிறேன். ஆமாம், ரஜினி என்ன சாதியைச் சேர்ந்தவர்? (சிரஞ்சீவி தமிழகம் அல்ல, ஆந்திரம் என்பதை அவரிடம் விளக்கினோம். மேலும் ரஜினியின் சமூகம் மராட்டியைச் சேர்ந்தது என்பதையும் சொன்னோம்...) ஓ, மராட்டியிலிருந்து வந்தவரா தமிழக மக்களை தனது கண்ணசைவில் வைத்திருக்கிறார்... ஆச்சர்யமாக இருக்கிறது.

மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் உங்கள், அதாவது ஹர்திக் படேலின் நிலைமை மிகவும் மோசமாகும் என்று குஜராத்தில் பேச்சு நிலவுகிறது?

இப்போது மட்டும் என்னவாம், ஏராளமான வழக்குகளை என் மீது பாஜக ஆட்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்தலுக்காகத்தான் என்னை விட்டு வைத்துள்ளார்கள் என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. ஆனால், எல்லாவற்றுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். சிறைக்கு செல்லவும் தயார். என் படேல் சமூகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்