புதுச்சேரி | மருத்துவ கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீட்டு ஒப்புதலில் கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீடு தர ஒப்புதல் தர கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதால் அதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 24ம் தேதி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர் வேதம்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

10 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 எம்.பி.பி.எஸ்., மருத்துவ சீட்டுகள் இந்த ஆண்டு கிடைக்கும். மேலும், 11 பி.டி.எஸ்., இடங்களும், 4 பி.ஏ.எம்.எஸ் இடங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். அமைச்சரவையின் பரிந்துரை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பப்பட்டது. இந்த கோப்பை, மத்திய உள் தறையின் ஒப்புதலுக்கு ஆளுநர் தமிழிசை அனுப்பினார்.

அமைச்சரவை கோப்பு அனுப்பி ஒரு வாரம் ஆன நிலையில் தற்போதைய நிலை என்ன என்று விசாரித்தபோது, "புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதற்காக அமல்படுத்தப்பட வேண்டும் என கேள்வி எழுப்பி கூடுதல் விபரம், விளக்கங்களை மத்திய உள்துறை கேட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கி வருவது குறித்த ஆவணங்களை தயார் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவது குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு உடனடியாக பதில் அனுப்ப அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது." என்றனர்.

சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மருத்துவ கல்விக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்கி இருக்க வேண்டும். உள்ஒதுக்கீட்டையும் இணைத்து நடத்தும் அரசின் முயற்சியால் சென்டாக் கலந்தாய்வு காலதாமதமாகி வருகிறது." என்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் தரப்போ, மத்திய அரசு தற்போது கேள்விகள் எழுப்பியுள்ளதால் இந்த கல்வியாண்டு மருத்துவக் கல்வியில் தங்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்குமா என்று காத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE