தாய்மொழி கல்வியால் நீதி கிடைத்திருக்கிறது - அகில இந்திய கல்வி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தாய் மொழிக் கல்வியால் மாணவ, மாணவியருக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் 3-ம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நேற்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி கல்விக்கு இருக்கிறது. தற்போது புதிய பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி தயாரித்து வருகிறது. இதன்படி 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார்130 பாடங்களில் புதிய புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் 22 இந்தியமொழிகளில் மொழி பெயர்க்கப்படும். திறமையின் அடிப்படையில் இளைஞர்களை மதிப்பிடாமல், அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதியாகும். புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாய்மொழிக் கல்வியால் மாணவ, மாணவியருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இது சமூக நீதிக்கான முக்கிய படிக்கல்.

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தாய்மொழியை மட்டுமே பயன்படுத்துகின்றன. நமது நாட்டில் வளமான மொழிகள் இருந்தும், நமது மொழிகளைப் பின்தங்கிய மொழியாகக் கருதுகிறோம். ஒருவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், அவரது திறமை ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக கிராம மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் மாணவ,மாணவியரிடையே தாழ்வு மனப்பான்மை அகலத் தொடங்கி இருக்கிறது. தாய் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா. சபையில்கூட நான் இந்திய மொழியிலேயே பேசுகிறேன்.

மொழி அரசியலுக்கு மூடுவிழா: இனிமேல் சமூக அறிவியல் முதல் பொறியியல் வரையிலான கல்வி, இந்திய மொழிகளிலேயே கற்பிக்கப்படும். தாய்மொழியில் கல்வி கற்கும்போது மாணவ, மாணவியரின் திறமையும் அறிவும் அபாரமாக வளரும். இதன் மூலம் நாட்டுக்கு இன்னொரு நன்மையும் கிடைக்கும். சிலர் மொழி அரசியல் செய்து அரசியல் வியாபாரம் நடத்தி கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடைகள் நிரந்தரமாக மூடப்படும்.

விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த விலையில் தரமான விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியாவுடன் போட்டி போடுவது கடினம் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன. நமது நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி உலகம் முழுவதும் இந்தியா மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

கதைகளில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று நிஜமாகிவிட்டது. பழைய சிந்தனைகளில் இருந்து வெளியேறி புதுமைக்கு மாற வேண்டும். அதற்கேற்ற வகையில் நமது மாணவ, மாணவியரை தயார்படுத்த வேண்டும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பது நமது கனவு. இந்த கனவை நனவாக்கும் கடமை இளைஞர்களின் கையில் உள்ளது. திறமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களால் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE