ஜார்க்கண்ட் மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி; 10 பேர் காயம்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்த மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 80 கி.மீ. தள்ளியுள்ள பொகாரோ மாவட்டத்தின் கேட்கோ கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. மொஹரம் பண்டிகையை ஒட்டி நடந்த ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இரும்பு கொடிக்கம்பு, மின் கம்பியில் உரசியதால் விபத்து நிகழ்ந்ததாக பொகாரோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி அலோக் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து அவர் கூறும்போது, “மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, அதற்தான ஊர்வலத்துக்கு தயராகும்போது சனிக்கிழமை காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்களின் கொடியை கையில் ஏந்திச் சென்றுள்ளனர். இரும்பாலான அந்தக் கொடிக் கம்பு, திடீரென 1,100 வாட்ஸ் உயர் மின்அழுத்தம் கொண்ட கம்பியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 8 பேர் பொகாரோ அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE