“எல்லாம் நடிப்பு... மணிப்பூர் போல ராஜஸ்தானுக்கும் செல்லுமா 'இண்டியா' எம்.பி.க்கள் குழு?” - மத்திய அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 'இண்டியா' கூட்டணியின் எம்.பி.கள் குழு செல்வது எல்லாம் நடிப்பு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கொல்கத்தா விமான நிலையம் வந்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இண்டியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் சென்றிருப்பது ஒரு நாடகத்தனமான செயல். எதிர்க்கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள், அவர்கள் ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிந்தது குறித்து எதுவும் பேசுவதில்லை. இண்டியா எம்பிகள் மணிப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவர்களை அப்படியே மேற்கு வங்கத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் கொடுமைகளுடன் உடன்படுகிறாரா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கொலைகளும் நடக்கின்றன எதிர்க்கட்சிகள் அங்கு ஏன் செல்லவில்லை. இண்டியா எம்பிக்கள் குழு ராஜஸ்தானுக்கும் செல்லுமா?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இண்டியா எம்பிக்கள் குழு மணிப்பூர் பயணம்: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் 'இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் சனிக்கிழமை காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றனர். இந்தக் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி, விசிகவின் தொல் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், பூலோ தேவி நீத்தம், கே.சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா, சிவ சேனாவின் அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங், அனீல் பிரசாத் ஹெக்டே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஏ ரஹிம், ஆர்ஜேடியின் ஜாவேத் அலி கான், சமாஜ்வாடி கட்சியின் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிபி முகமது ஃபைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடி முகமது பஷீர், விசிக ரவிக்குமார், ஆர்எஸ்பி என்கே பிரேமசந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை பின்னணி: மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் குகி உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE