“குற்றவாளிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும்” - மணிப்பூர் விவகாரத்தில் கேரள ஆளுநர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மணிப்பூர் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பல்பிர் புஞ்ச் எழுதிய ‘நேரேட்டிவ் கா மாயாஜால்’ என்ற புத்தக வெளியீட்டில் கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர் கூறியதாவது: "மணிப்பூரில் மட்டுமில்லை நாட்டின் எந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தாலும் அது மிகவும் வெட்கக் கேடானது. ஆனால் உண்மையான சோதனை என்னவென்றால், அப்படித்தான் நடக்கிறது. ஆனால் உண்மையான சோதனை என்பது குற்றவாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது தான்.

குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா இல்லையா என்பது தான் இங்கு முக்கியமான விஷயம். ஆனாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய அரசு இயந்திரத்தை நீங்கள் செயல்பட அனுமதிக்கும்போது அது தானாக நடக்கும். அவ்வாறு நடக்கிறது என்று நான் எண்ணுகிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?: மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று மே 4-ம் தேதி நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். சுமார் 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே மாதம் எடுக்கப்பட்ட அந்த வீடியோ மாநிலத்தில் இணையத் தடை நீக்கப்பட்டதும் ஜூலை 19-ம் தேதியே பகிரப்பட்டு அதிச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வன்முறை: மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE