உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: யூபிஎஸ்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மை இல்லை என்று யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. வினாத்தாளின் சில பக்கங்கள் அதில் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வு நடந்து முடிந்த பிறகே வினாத்தாளின் சில பக்கங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. ஆனால், முன்கூட்டியே வெளியானதாக வதந்தி பரப்பப்படுகிறது.

சமூக ஊடங்களில் வினாத்தாள் வெளியாகும் முன்பே லட்சக்கணக்கான மாணவர்களிடத்தில் வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுவிட்டது. தேர்வு ஆணையமும் இந்த வினாத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. எனவே, அத்தகைய தகவல்கள் நம்பகமானவையோ அல்லது நடவடிக்கை எடுக்கக்கூடியவையோ அல்ல.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தேர்வின் செயல்முறைகள், சோதனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. மேலும், மிகுந்த எச்சரிக்கையுடன், அசாதாரண போக்கைக் கண்டறியும் நோக்கில் தகுதிப் பட்டியலின் அனைத்து மட்டங்களிலும் தேர்வு முடிவுகளின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நிலையிலும் தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் தகுதி நிலைகள் ஒழுங்காகவும், தேர்வாளர்களின் செயல்திறனுக்கு ஏற்பவும் இருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

சில மையங்களில் இருந்து அதிக விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவதைப் பொறுத்தவரை, திறந்த போட்டிகளில் இது அசாதாரணமானது அல்ல. நிகழ்வுகள் மற்றும் தரவுகளின் விரிவான மற்றும் முழுமையான பகுப்பாய்வின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் தகுதியற்றவை என்று ஆணையம் உறுதியாகக் கருதுகிறது என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE