மணிப்பூர் வன்முறை வழக்குகளில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை: சிபிஐ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததை அடுத்து, அந்த வழக்குகளை விசாரிக்க சிபிஐ முன்வந்தது. இதையடுத்து, மாநில காவல் துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ கடந்த மாதம் எடுத்துக்கொண்டது. எனினும், முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களை அது இன்னும் வெளியிடவில்லை. அதோடு, இந்த வழக்குகளில் இதுவரை யாரையும் சிபிஐ கைது செய்யவில்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்துப் பேசிய சிபிஐ அதிகாரிகள், "உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து, 6 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த டிஐஜி ரேங்கில் உள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படி, மாநில காவல்துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கைகளை கடந்த மாதம் பெற்றுக்கொண்டோம். தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

விரோதத்துடன் கூடும் மக்கள் கூட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட எதிர்ப்புகளை சிறப்பு விசாரணைக் குழு எதிர்கொண்டு வருகிறது. இன அடிப்படையில் கடுமையான தவறுகள் நிகழும் ஒரு மாநிலத்தில் சாட்சிகளைக் கண்டுபிடிப்பது கடினமானது. ஆறு முதல் தகவல் அறிக்கை தொடர்பாக இதுவரை சிபிஐ யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை தொடர்கிறது" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE