புதுடெல்லி: மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோட்டீஸ் குறித்த பேச்சின்போது அவைத் தலைவர் ஜக்தீர் தன்கருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையனுக்கும் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. எதிர்க்கட்சிகளின் அமளியுடன் தொடங்கிய மக்களவை தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக மாநிலங்களவை கொஞ்சம் அமையுடன் தொடங்கியது. அவைத் தொடங்கியதும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வு பெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியாவிடை குறிப்பும் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "மரியாதைக்குரிய உறுப்பினர்களே கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தினமும் விதி 267-ன் கீழ் அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணற்ற நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 23 வருடங்களில் விதி 267ன் கீழ் வழங்கப்பட்ட எத்தனை நோட்டீஸ்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது இந்த அவைக்கு நன்றாக தெரியும்.
நாடாளுமன்ற நடவடிக்கையின் இதயம்: இந்தப் பின்னணியில், நான் அந்தச் சூழ்நிலையை (267 விதியின் கீழ் விவாதிக்க வேண்டும்) தினமும் எதிர்கொள்கிறேன். இதன் விளைவுகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஒட்டுமொத்த தேசமே கேள்வி நேரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கேள்வி நேரம் என்பது நாடாளுமன்ற நடவடிக்கையின் இதயம் போன்றது என்று விளக்கிக் கொண்டிருக்கும்போதே, "அதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம்" என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் குரல் தெரிவிக்கிறார். அதற்கு அவைத் தலைவர் “உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கு தெரியும் என்பதை விளக்க வேண்டியதில்லை, காதுகளைத் திறந்து வைத்து அமைதியாக கேளுங்கள்” என்று கூறினார்.
» மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம் - ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு
» மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை - மக்கள் பாதிப்பு
நாடகங்களை உருவாக்க வேண்டாம்: அப்போது, “நாங்கள் அதை உணர்தே இருக்கிறோம்” என்று தனது கோரிக்கையை ஓ பிரையன் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த அவைத் தலைவர், "காதுகளைத் திறந்து அமைதியாக உங்கள் இருக்கையில் அமருங்கள். டெரிக் ஓ பிரையன் நாடகங்களை உருவாக்குவது உங்களுடைய பழக்கமாகிவிட்டது. ஒவ்வொருமுறையும் வேகமாக எழுந்து முந்திக் கொண்டு பேசுவது உங்களுடைய தனிச் சிறப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் காட்டவேண்டிய குறைந்தபட்ச விஷயம் அவைத் தலைமைக்கு மரியாதை தருவது. நான் ஏதாவது சொல்லும்போது நீங்கள் கொதித்தெழுந்து ஒரு நாடகத்தை உருவாக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
விதியை பேசுகிறேன்: இருந்தும் மனம் தளராதவராக அவைத் தலைவரின் நாடகம் என்ற பேச்சுக்கு கடுமையான எதிப்புத் தெரிவித்த பிரையன், மேஜையேத் தட்டியபடி “நான் நாடகங்களை உருவாக்கவில்லை. நான் சபை விதிகளையே மேற்கோள் காட்டுகிறேன். மணிப்பூர் விவகாரத்தில் விதி 267 தீவிரமான விவாதம் அவசியம்” என்றார். அதற்கு அவைத் தலைவர் "மேஜையில் தட்டாதீர்கள்.. மேஜையில் தட்டாதீர்கள்.. இது நாடகம் இல்லை" என்றார் கோபமாக. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் மாநிலங்களையைத் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைத்தார்.
விதி 267: நாடாளுமன்ற விதி 267 என்பது உறுப்பினர் ஒருவருக்கு அவைத் தலைவரின் அனுமதியுடன் அவையின் முன்தீர்மானிக்கப்பட்ட நடைமுறைகளை ஒத்திவைக்க சிறப்பு அதிகாரம் வழங்குகிறது. ஆனால் இந்த முறையில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் மிகவும் அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 11 முறை மட்டுமே இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஹமீது அன்சாரி அவைத்தலைவராக இருந்த போது, பணமதிப்பிழத்தல் மீது இந்த விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளுக்கும் மரியாதை கொடுங்கள்: முன்னதாக, மழைக்கால கூட்டத்தொடருக்காக மூன்றாவது நாளில் இது போன்ற காரசாரமான விவாதம் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையனுக்கு இடையே நடந்தது. அன்று மாநிலங்களவைக் கூடியதும் அவையில் பேசிய அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், அன்று விவாதத்துக்காக விதி 176-ன் கீழ் 11 நோட்டீஸ்களும், விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அப்போது விதி 176-ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்களை அவர்கள் சார்ந்த கட்சிப் பெயருடன் சேர்த்து வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து, விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது, அவர்களின் கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், விதி 176 ன் கீழ் நோட்டீஸ் அளித்தவர்களின் பெயர்கைளைப் போலவே இவர்தளின் பெயர்களையும் கட்சிப் பெயருடன் சேர்த்து வாசிக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின் பெயர்களை அவைத்தலைவர் வாசிக்கும்போது, "எந்தக் கட்சி? எந்தக் கட்சி? எனக்கு கட்சித் தெரிவேண்டும்!" என்று எழுந்து நின்று முழக்கமிட்டார். இதனைத் தொடர்ந்து ஓ. பிரையனைப் பார்த்து அவைத் தலைவர் "முதலில் உங்கள் இடத்தில் உட்காருங்கள்" என்றார்.
அதனை ஏற்க மறுத்த ஓ பிரையன், கூப்பிய கரங்களுடன், பாஜக எம்.பி.,களின் பெயர்களை கட்சி சார்புடன் வாசித்த நீங்கள் அதே மரியாதையை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரையானை அவரது இருக்கையில் அமருமாறு சில முறை கூறினார். பின்னர் டெரிக் ஓ பிரையன் உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் அவைத் தலைமையை எதிர்க்கிறீர்கள் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago