மணிப்பூர் வீடியோ மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதில் சதி: அமைச்சர் அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் ஒரு கும்பல் பழங்குடியினப் பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற வீடியோ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதன் பின்னனியில் சதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி மணிப்பூரில் இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் இருந்த இளம்பெண்கள் குகி இனத்தவர் என்பதும் அவர்களை இழுத்துச் சென்றவர்கள் மைத்தேயி இனத்தவர் என்பதும் தெரியவந்தது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த வீடியோ வெளியான தருணத்தின் பின்னணியில் சதி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "மணிப்பூரில் 1990கள் முதல் மைத்தேயி - குகி இன மோதல்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. மே 4ஆம் தேதி நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய வீடியோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன். முதல்நிலை விசாரணையில் இந்த வீடியோவை ஜூலை 19 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாளில் வெளியிட வேண்டிய அவசியம் குறித்து ஆராயப்படுகிறது. இதன் பின்னணியில் மோடி அரசின் மாண்பை குலைக்கும் சதி இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் மணிப்பூர் அமைதியை சிதைக்கும் வகையில் உலா வரும் மேலும் 2 வீடியோக்கள் தொடர்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை மியான்மரில் கடந்த 2022-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பதிவு என்பதும் தெரியவந்துள்ளது.

சிபிஐ-யிடம் ஏற்கெனவே 6 வழக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. 7வது வழக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது. நடுநிலையான விசாரணைக்காக இந்த வழக்கு விசாரணை மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மணிப்பூர் தொடர்பாக மூன்று வழக்குகள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான தகவல்களைப் பெறும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE