ச
பர்மதி காந்தி ஆசிரமத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது கேசவ நகர். சற்றே தூரத்தில் சுத்தமாக சலசலத்து ஓடுகிறது சபர்மதி ஆறு. அருகிலேயே சபர்மதி ரயில் நிலையம். இதையொட்டி உள்ளடங்கிய பாதையில் சென்றால் வருகிறது கேசவ் நகர். அது முற்றிலும் மாறுபட்ட அகமதாபாத். சின்னதாக ஒரு முத்து மாரியம்மன் கோயில். வண்டிக்கடையில் வடைக்கறி வாசம்.. நாக்கில் வேர்க்க வைக்கிறது. ரோட்டோர கடையில் பாட்டி ஒருவர் சுடச்சுட இட்லியுடன் தக்காளி சட்னி வைத்துக்கொடுக்கிறார்.
கூலித் தொழிலாளர்கள் தெருவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விலை அதிகமில்லை, ஒரு தட்டில் நான்கு இட்லி பத்து ரூபாய்தான்... வெறும் சப்பாத்தியால் ஒரு வாரமாக செத்துக்கிடந்த நாக்குக்கு உயிர்க் கொடுத்தார் இட்லிக்கடை பாட்டி!
“எங்க இடத்துக்கு இதுவரைக்கும் பத்திரிகைக்காரங்க யாரும் வந்ததேயில்லை, இங்க வர்ற முதல் பத்திரிகையாளர் நீங்கதான்... வயிறார சாப்பிடுங்க தம்பி...” வாஞ்சையோடு பேசுகிறார் பழனியம்மாள். சபர்மதி மட்டுமல்ல, அகமதாபாத் நகரை ஒட்டியிருக்கும் மணிநகர், வட்வா, நரோடா, பாபு நகர் இவை எல்லாம் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு முகம் காட்டுகிறது.
மணிநகர் சென்றால் தமிழர்கள் வியாபாரத்தில் செழிக்கிறார்கள். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து வெள்ளை மோட்டாத் துணியை வாங்கி வந்து பல்வேறு கட்டங்களாக மதிப்புகூட்டி விற்கிறார்கள். லாரி டிரான்ஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.
பாபு நகரில் தமிழர்கள் பலரும் கட்டிட ஒப்பந்ததாரர்கள். மணிநகர், வட்வா, நரோடா இங்கெல்லாம் தமிழர்கள் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள். மொத்தமாக அகமதாபாத்தில் மட்டும் சுமார் 15,000 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழர்களிடம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அரசியலில் இவர்களின் பங்கு என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு? என்பதை எல்லாம் அறிய மேற்கண்ட பகுதியில் சுற்றினோம்.
சபர்மதி பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் இருக்கின்றன. அந்தப் பகுதியின் முக்கியப் பிரமுகராக இருக்கிறார் சூர குமார். “நாங்கெல்லாம் பிறந்து வளர்ந்ததே இந்த ஏரியா தாங்க. ரொம்ப வருஷமா மோடி கட்சிக்குதான் ஓட்டு போடுறோம். இந்த முறையும் அவர் கட்சிக்குதான் ஓட்டு போடுவோம்.
இதோ இந்த ஏரியாவெல்லாம் மண் ரோடா ஒரே சாக்கடையா இருந்தது. இவங்க கவர்மெண்ட்டுலதான் சிமெண்ட் ரோடு போட்டாங்க. இங்க வீடு கட்டிக்க அனுமதி கொடுத்தாங்க. குடிதண்ணி வசதி செஞ்சுக் கொடுத்தாங்க. ஏதாச்சும் பிரச்சினைன்னா கவுன்சிலருக்கு போன் அடிச்சா பத்து நிமிஷத்துல வந்துடுவாரு...” என்கிறார்.
பெரியவரான இருசமுத்து, “எங்க குடும்பத்துல ஒரு பகுதி உளுந்தூர்ப்பேட்டையில இருக்குது. ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வரும்போது ரேசன் கார்டுக்கு நடையா நடக்குறேன். கிடைச்சபாடில்லை. இங்கே அப்ளிக்கேஷன் கொடுத்தவுடனே ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்து விசாரிச்சிட்டு பத்து காசு செலவு இல்லாம கார்டு கொடுக்குறாங்க. இந்த கவர்மெண்ட்டுல எந்த தொந்தரவுமில்லைங்க...” என்கிறார்.
இடைமறிக்கும் இளைஞரான தங்கராசு, “தாத்தா இதையே எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டிருப்ப... ரூபா நோட்டு செல்லாததாக்கினப்ப மொத்த தெருவும் பட்டினிக் கிடந்தோமே மறந்துபோச்சா... கொஞ்ச நாளா அவங்க ஆளுங்க நம்மளைக் கண்டுக்காம போறாங்க. அவங்க மட்டும்தான் ஆட்சியில இருக்குணுமா. ஒரு மாற்றத்துக்கு இந்த முறை காங்கிரஸுக்கு ஓட்டு போடுவோம்...” என்கிறார். அந்தத் தாத்தாவின் பேரன் இவர்.
குடும்பத் தலைவியான லட்சுமி, “குழந்தைகளுக்கு தமிழ் ஸ்கூல் இருக்குப்பா. ஏழாங்கிளாஸ் வரைக்கும் தமிழ்ல சொல்லிக்கொடுக்குறாங்க. அதுக்கு அப்புறம் மணிநகர் ஸ்கூல்லுக்கு அனுப்பிடுவோம். அங்க பிளஸ் 2 வரைக்கும் தமிழ் மீடியம் இருக்கு. என்ன தமிழ் நடத்துற டீச்சருக்கு பற்றாக்குறையா இருக்கு. இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தா குழந்தைங்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காங்க. நாங்க எப்பவுமே பாஜக-வுக்கு ஆதரவு. அவங்கதான் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காங்க” என்கிறார்.
சபர்மதி பகுதியில் வெஸ்டர் ரயில்வே மஜ்தூர் பஞ்சாயத்து தலைவராகவும் கர்னாவதி தமிழ் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் இருக்கிறார் சத்தியவான். மேற்கண்ட பகுதி மக்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்கிறார். “இருபது வருஷம் முன்னாடி காங்கிரஸ் ஆட்சியில இதே அகமதாபாத் எப்படி இருந்துச்சு தெரியுமா? இதோ இந்த சபர்மதி ஆறு சாக்கடை மாதிரி ஓடுச்சு. இப்ப எப்படி இருக்கு... கையில அள்ளி தண்ணியைக் குடிக்கிறோமில்லையா.
இந்தியாவில் ஒரு நெரிசலான நகரத்துக்குள்ளே இப்படி சுத்தமா ஓடுற ஒரு நதியைக் காட்டுங்க பார்ப்போம். இதை செஞ்சது பாஜக கட்சிதானே. முன்பு காங்கிரஸ் ஆட்சியில அஞ்சு வருஷத்துக்கு ஒரு மேம்பாலம் கட்டினாலே பெரிய விஷயம். ஆனால், கடந்த ரெண்டு வருஷத்துல அகமதாபாத்தில் மட்டும் சானந்த், சர்க்கேஜ், மணிநகர், உஸ்மான்புரா, பாபுநகர், இன்கம்டாக்ஸ் ஏரியா மேம்பாலங்கள் உட்பட 49 மேம்பாலங்கள் கட்டியிருக்காங்க.
இதுல இன்கம்டாக்ஸ் ஏரியா மேம்பாலத்தின் நீளம் மட்டும் 16 கி.மீட்டர். இதோ இப்போ மெட்ரோ ரயில் வேலை நடக்குது. தமிழ்நாட்டுல ஏதாவது பிரச்சினைன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா ஏட்டுகூட மதிக்க மாட்டாங்க. இங்கே இன்ஸ்பெக்டரைப் போய் பார்த்தா சலாம் சாப் சொல்லி சேர்ல உக்கார வெச்சிப் பேசுவாங்க. நம்பிக்கை இல்லன்னா நீங்க பக்கத்துல இருக்குற மணிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பாருங்க.
எங்களுக்குன்னு இல்லை, குஜராத் போலீஸ் ஸ்டேஷன், கவர்மெண்ட் ஆபீஸ் இங்கெல்லாமே பொதுமக்களுக்கு அவ்வளவு மரியாதை. ஏன்னா, தப்பு செஞ்சா கவர்மெண்ட் நம்ம மேலே நடவடிக்கை எடுத்துடுவாங்கன்னு பயம் இருக்கு. அந்தப் பயத்தை உருவாக்கி வெச்சது பாஜக அரசாங்கம்தான். சில குறைகள் இருந்தாலும் பாஜக ஆட்சியில் தமிழர்கள் நாங்க நிம்மதியாக வாழுறோம். அதுபோதும்...” என்கிறார்.
கர்னாவதி தமிழ்ச் சங்கத் தலைவரான பாலாஜி, “ஆனால், அரசியலில் இதுவரைக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டுகூட பாஜக கட்சி தமிழர்களுக்கு கொடுத்ததில்லை. எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் போட்டியிட பாஜக வாய்ப்பு தரணும்” என்கிறார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர்களின் வாக்குகள் இங்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாதுதான். ஆனாலும் இங்கிருக்கும் தமிழர்கள் பாஜக ஆட்சியின் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். உள்ளூரில் அரசு இயந்திரம் தனது கடமையை சரியாக செய்வதே இதற்குக் காரணம் என்று அறியமுடிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago