ஆ
ர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.
‘கேட்ச்-22’ என்ற நாவலை எழுதிய ஜோசப் ஹெல்லர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் மிலோ மைன்டர்பைன்டர் என்றொரு பாத்திரத்தைப் படைத்திருப்பார். அவர் அதிகாரி என்ற வகையில் படைக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் லாபம் பெறத் தொடங்கி, கடைசியில் தனக்குத்தானே பொருள்களை விற்றுக்கொள்வார்! அரசின் பணத்திலிருந்து அவர் லாபமும் சம்பாதித்துக் கொள்வார். ஒரு கிராமத்தில் கிடைக்கும் முட்டைகள், தக்காளி அனைத்தையும் வாங்கி நல்ல லாபத்துக்குத் தன்னுடைய ராணுவ படைப்பிரிவுக்கே விற்றுவிடுவார்.
இப்படியே வளர்ந்து கடைசியில் உலகத்தில் விளையும் பஞ்சு முழுவதையும் அவர் ஒருவரே கொள்முதல் செய்துவிடுவார். பஞ்சை வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். விற்காத பஞ்சை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து அதை சாக்லேட்டில் தோய்த்து தன்னுடைய படைப்பிரிவு அதிகாரிகளுக்கே தின்பண்டமாகவும் விற்க முயற்சிப்பார். இதனால் எகிப்தின் பஞ்சு சந்தைக்கே அவர் எமனாகிவிடுவார்!
புத்திசாலியான அவர் அதிலிருந்து மீள ஒரு வழியும் கண்டுபிடித்துவிடுவார். இதை அரசாங்கத்துக்கே விற்றால் என்ன என்று முடிவெடுப்பார். பிறகு அவருக்கே தோன்றும், அரசாங்கத்துக்கு வியாபாரத்தில் என்ன வேலை என்று. எந்த வியாபாரமானாலும் அதில் அரசாங்கத்தின் பங்கும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் கூறியது அவருக்கு நினைவுக்கு வரும். எனவே பஞ்சை அமெரிக்க அரசுக்கே விற்றுவிடுவது என்று உறுதியான முடிவெடுப்பார்.
மைன்டர்பைன்டர் இடத்தில் இந்திய அரசைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். 1969-க்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த எகிப்திய பஞ்சு - பெரிய வங்கிகள்தான். இந்திரா காந்தி முதலில் பெரிய வங்கிகளை தேசியமயமாக்கி வங்கி - நிதித்துறையில் அரசுக்கு ஏகபோக உரிமையைப் பெற்றுத்தந்தார். அதையடுத்து அரசானது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதி நிறுவனங்களுக்கும் சொந்தக்காரரானது. ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஐஎஃப்சிஐ போன்றவை அந்த நிதி நிறுவனங்கள். பிறகு அரசு தன்னிடமிருந்தே கொள்முதல்களைத் தொடங்கியது. வங்கிகள் தாங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்களைத் தாங்களே விலை கொடுத்து வாங்கின, அரசின் திட்டங்களுக்குக் கடன் கொடுத்தன, அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நிதி வழங்கின, கடன் மேளாக்களை நடத்தி கடன்களை வழங்கியது அரசு, வாராக்கடன் அதிகரித்தபோது கடன்களைத் தள்ளுபடியும் செய்தது. வங்கிகளை தேசியமயமாக்கிய செயலானது தேர்தலில் கட்சிக்கு வாக்குகளைச் சேர்க்கவும் உதவியது. இந்த நடைமுறைகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அரசு வங்கிகள் கடன் சுமையில் மூழ்குவது தொடர்ந்தது.
பெரிய வங்கிகள் அரசுக்குச் சொந்தமாக இருப்பதால் அவற்றைத் திவால் ஆக விட்டு விட முடியாது. அவற்றுக்குச் சொந்தக்காரரான அரசாங்கம் அதிகாரங்கள் மிகுந்தது. வங்கிகள் நொடித்துப் போகும் நேரம் வரும்போதெல்லாம் வரிகளை உயர்த்தியும் ரூபாய் நோட்டுகளை அதிகம் அச்சிட்டும் வங்கிகளைக் காப்பாற்றும். இப்போதும் அரசு அதைத்தான் செய்கிறது. வாராக்கடன் அளவு அதிகமாகிவிட்டதால் ‘மறுமுதலீட்டை’ அரசு வழங்கப்போகிறது. வெவ்வேறு வழிகளில் இதை மேற்கொள்கின்றனர். வங்கிகளின் வாராக்கடன் அளவில் பெரும் மதிப்புக்கு கடன் பத்திரங்கள் விற்கப்படும். கையில் உபரி ரொக்கம் இருக்கும் அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றை வாங்கும். இப்போது சொல்லுங்கள், நம்முடைய அரசு மைன்டர்பைன்டரைவிட புத்திசாலியான முதலாளி இல்லையா? மைன்டர்பைன்டரின் பொருளாதாரத்தை ‘கேட்ச்-22’ என்று வர்ணித்தால், நம்முடைய அரசின் பொருளாதாரம் அதைவிட ஒருபடி மேல், ‘கேட்ச்-23’!
இதைவிட துணிச்சலான மாற்று வழிகளும் இருக்கின்றன. வாராக்கடன் சுமை அதிகமாக உள்ள இரண்டு சிறிய அரசுடைமை வங்கிகளை முதலில் அவர் விற்றிருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில், அதிகக் கடன் சுமையுள்ள தேசிய வங்கி ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்திருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அது நிதிச் சந்தையை உற்சாகப்படுத்தியிருக்கும். அதிர்ச்சியுற்ற அரசு வங்கிகள் தங்களுடைய வரவு - செலவுகளை அக்கறையுடன் பராமரிக்கத் தொடங்கும்.
மன்மோகன் சிங், பி.வி.நரசிம்ம ராவ், ப. சிதம்பரம் உள்ளிட்ட யாருமே அரசுத்துறை நிறுவனங்களை விற்கத் துணிந்ததில்லை; அதிலும் லாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்க முற்பட்டதே இல்லை. அப்படியொரு உள்ளுணர்வு கொண்டிருந்தவர் வாஜ்பாய் மட்டுமே. நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி விற்கக்கூடாது என்று எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகிய நிறுவனங்களின் விற்பனையை உசச நீதிமன்றம் அப்போது தடுத்து நிறுத்தியது. வாஜ்பாய் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மோடி தொடங்குவார் என்று எதிர்பார்த்தோம். மோடி என்ன செய்கிறார்? எச்பிசிஎல் நிறுவனத்தை விற்கிறார், யாருக்கு - அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கே!
வாஜ்பாயைப் போல அல்லாமல் மோடி கொள்கைப் பிடிப்புள்ள ஸ்வயம்சேவக்; ஆர்எஸ்எஸ்ஸின் சமூக-பொருளாதார சித்தாந்தங்களில் முழு நம்பிக்கை உள்ளவர். மோகன் பாகவத் போல ஸ்வயம்சேவக்காக இருக்க வேண்டும், வாஜ்பாயைப் போல நவீன சீர்திருத்தவாதியாக நினைவுகூரப்பட வேண்டும் என்ற இரட்டை ஆசைகளால் உந்தப்பட்டுள்ளார்; இறுதியில் இந்திரா காந்தியைப் போல, ‘அரசுதான் சமூக – பொருளாதார விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.
மோடி முழு நேர ஸ்வயம்சேவக்காக இருந்தவர்; கட்டுப்பெட்டியான சிந்தனைகளால் வளர்க்கப்பட்டவர். அவை அவ்வளவு எளிதில் அவரைவிட்டு விலகாது. அதேசமயம், உலகின் பல நாடுகளுக்கும் சென்று வருகிறார், உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார், வெற்றிகரமான பொருளாதாரங்களையும் சமூகங்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. எனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் தோன்றலாம். . இந்த இடத்தில்தான் மோடியின் பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இது ‘கேட்ச்-24’ அரசியல்!
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்
முதன்மை ஆசிரியர்
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago