பெங்களூரு: தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.200 வரை தொட்டுவிட்டு ஜூலை 17-க்குப் பின்னர் சற்றே குறையத்தொடங்கிய நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக மீண்டும் சரசரவென்று உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ பெங்களூரு தக்காளி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்ற நிலையில் தற்போது அங்கு கிலோ ரூ.140-க்கும் அதிகமாக விற்பனையாகிறது.
இது குறித்து வியாபாரிகளும் வேளாண் சந்தை அதிகாரிகளும் கூறுகையில், "இடைவிடாமல் மழை பெய்வதே மீண்டும் பெங்களூரு தக்காளி விலை உயரக் காரணம். மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏற்கெனவே செடிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகளை அறுவடை செய்ய இயலவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் வரத்து குறைந்து தேவை அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கோலார் சந்தையில் தக்காளி கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1400 முத்ல் ரூ.1900 வரை விற்றன. இந்த வாரம் தக்காளி பெட்டி ஒன்று ரூ.2000-க்கு விற்பனையாகிறது. அதுவும் உயர்தர தக்காளி என்றால் அது ஒரு பெட்டி ரூ.2100-க்கு விற்பனையாகிறது" என்றனர்.
தக்காளி ஏலச் சந்தை நடத்தும் வியாபாரி ஒருவர் கூறுகையில், "பெங்களூருவுக்கு தக்காளி பிரதானமாக கோலார் பகுதியில் இருந்தே வரும். ஆனால் அங்கு இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கிறது. இதுதவிர கிக்கபல்லபூர், குனிகல், ராமநகரா, அனேகல், கனகாபூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி வரும். ஆனால் இந்தப் பகுதிகள் அனைத்துமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு ரூரல் பகுதியிலும் இதே நிலைதான். இதனால் பெங்களூரு தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு நாட்களில் பெங்களூரு தக்காளி விலை ஒரு பெட்டி ரூ.2500-ஐ கடந்து விற்கும் என்று கணிக்கிறோம்" என்றார்.
முன்னதாக, தக்காளி விலை உயர்வு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே எழுதுபூர்வமாக அளித்த பதிலில், "மகாராஷ்டிராவின் நாசிக், நார்யாண்காவோன், அவுரங்காபாத் பகுதிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பதால் தக்காளி விலை படிப்படியாகக் குறையும்" என்று கூறியிருந்தார். ஆனால் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விலை குறைவது இப்போதைக்கு சாத்தியப்படாத சூழல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
» ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மொஹரம் ஊர்வலம்
» அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா செப்.15 வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
தமிழகம், புதுச்சேரியில் தக்காளி விலை நிலவரம்: தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1100 டன் தக்காளி வந்துகொண்டிருந்த நிலையில், இது இன்று 400 டன்னாக குறைந்துவிட்டது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி இன்று ரூ.140 ஆக உயர்ந்தது. தக்காளி கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் பீன்ஸ் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ப்யூரிக்கு மாறும் உணவகங்கள்: இதற்கிடையில் நாடு முழுவதும் பரவலாக உணவகங்களில் தக்காளிக்குப் பதிலாக தக்காளி ப்யூரி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்திய உணவுகளில் தக்காளி பிரதானமாக பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை இப்படியாக மாற்றை நோக்கி வரச் செய்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago