ராஜ் தாக்கரே உடன் இணையும் திட்டம் இல்லை: உத்தவ் தாக்கரே

By செய்திப்பிரிவு

மும்பை: நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே உடன் இணையும் திட்டம் இல்லை என்று சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு, பாஜக கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களில் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, பதவிக்காக கொள்கைகளில் சமரசம் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டிய ராஜ் தாக்கரே, இது தொடர்பாக பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். இவ்வாறு கொள்கை சமரசம் ஏற்படுத்திக்கொள்வதை பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தோல்வி அடைந்தது. தீவிர இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் சிவ சேனாவுக்கே வாக்களித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து, சிவ சேனா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால், ராஜ் தாக்ரே தீவிர இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கத் தொடங்கினார். அதோடு, பாஜகவோடு மேலும் நெருக்கம் காட்டினார்.

இந்நிலையில், ராஜ் தாக்ரே உடன் உத்தவ் தாக்கரே கை கோர்க்க உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இது விஷயத்தில் இரு தரப்பிலும் அமைதி காக்கப்பட்டு வந்ததால், அது உண்மைதானோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில், தனது 63-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவ சேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத்துக்கு அளித்த பேட்டியில், "உத்தவ் தாக்கரே உடன் இணைவது தொடர்பாக இதுவரை விவாதம் நடக்கவில்லை. அதுபோன்று ஊகம் செய்வது அவசியமற்றது" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE