ஜூலை 29-ல் மணிப்பூர் செல்கிறது 'இண்டியா' எம்.பி.க்கள் குழு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் 'இண்டியா' கூட்டணி எம்.பி.க்கள் நாளை மறுநாள் அம்மாநிலம் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அவர்கள் மணிப்பூரில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை: மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந் துள்ளனர்.

இதனிடையே குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நகரங்களில் இந்த சம்பவத்தை கண்டித்து மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள மோரேபஜார் பகுதியில் வன்முறையாளர் கள் ஒன்றுதிரண்டு அங்குள்ள வீடுகளை தீவைத்து எரித்தனர். காங்போக்பி மாவட்டத்தில்..: அதேபோன்று, காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியது. இந்த சம்பவங்களில் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

திமாபூரிலிருந்து நேற்று சபோர்மெய்னாவுக்கு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, உள்ளூர்வாசிகள் சிலர் பேருந்தை நிறுத்தி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சோதனையிட்டனர். அதன்பிறகு, அந்த பேருந்தை சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE