“எதிர்க்கட்சியினர் எதையும் கேட்கத் தயாராக இல்லை” - நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் எதையும் கேட்கத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவையில் எதிர்க்கட்சிகளின் நடத்தைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதங்களில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட வளர்ச்சிகள் குறித்து வியாழக்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றினார். அவரின் உரையின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். மாநிலங்களவையில் நிலவிய இந்த அமளியால் அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதையும் கேட்க மறுப்பது அதிருப்தி அளிக்கிறது. இது நாட்டின் எந்த ஒரு சாதனையையும் அவர்கள் விமர்சிக்க மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

வெளியுறவுக்கு கொள்கை என்பது நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படும் ஒரு விஷயம். நாட்டுக்குள் நாம் எந்த வகையான விவாதங்களும் ஈடுபடலாம். ஆனால் நாட்டுக்கு வெளியே ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் இன்றைய நடத்தை கவனிக்கப்பட வேண்டிய ஒன்ற., தேசநலன் என்று வரும்போது அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் தேசநலனை பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பெருமைகளை அடுக்கி உரைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் பிரதமர் அவைக்கு வர வலியுறுத்தியும், மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தியும் பேசினர். அப்போது என்டிஏ கூட்டணியினர் ‘மோடி, மோடி...’ என்று குரல் எழுப்ப, ‘இண்டியா’ கூட்டணியினர் ‘இண்டியா, இண்டியா’ என்று குரல் எழுப்பினர். இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்ப அவை அதிர்ந்தது.

கருப்புச் சட்டையில் வந்த எம்.பி.க்கள்: அவைக்கு இன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந்தும் அப்படியில்லாதோர் கையில் கருப்புத் துணி கட்டியும் வந்திருந்தனர். ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்தப் பேட்டியில், "மணிப்பூர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராகவும், அங்கே நிகழும் காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்தும் இன்றைய தினம் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். இது ஓர் அடையாளப் போராட்டம். மணிப்பூர் மக்களின் துயரில் நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை நிறுவுகிறோம்” என்றார்.

பியூஸ் கோயல் விமர்சனம்: வெளியுறவுத் துறை அமைச்சரின் உரையினைத் தொடர்ந்து மாநிலங்களவையின் சபைத் தலைவர் பியூஸ் கோயல் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கறுப்பு உடைகள் குறித்து விமர்சித்தார். அவர் கூறுகையில், "இவ்வளவு தீவிரமான விஷயத்திலும் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியாவின் கவுரவப் பிரச்சினை. சர்வேதச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதைப் பற்றிய விஷயம்.

இன்று கருப்பு உடை அணிந்து வந்திருப்பவர்களால் வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்களின் கடந்த காலம், நிகழ் மற்றும் எதிர்காலம் கறுப்பானது. அவர்களின் வாழ்விலும் வெளிச்சம் வரும் என்று நம்புவோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE