ஜூலை 27 பருவமழை நிலவரம் | தெலங்கானாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள் மீட்பு; மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தெலங்கானாவில் முலுகு மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 80-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது.

தெலங்கானாவில் சுற்றுலா பயணிகள் மீட்பு: தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்கிக் கொண்டனர். திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுக்க ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். முத்யம்தரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டதை வனத்துறை உறுதி செய்துள்ளது. பலமணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று அதிகாலை பயணிகள் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் பற்றி முலுகு மாவட்ட எஸ்,பி கூறுகையில், "முத்யாலாதரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்கிக் கொண்ட 80 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. 90 சதவீதம் பேர் நலமுடன் உள்ளனர். ஒரு சிறுவனுக்கு தேள் கடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்வதன் எதிரொலியாக இன்று அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் விசாகப்பட்டினத்தில் பரவலாக பலத்த மழை பெய்ததால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக விசாகப்பட்டின கடற்கரையை ஒட்டி குறைந்த காற்றுழுத்தம் உருவாகியுள்ளதால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இரு மாநிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் சூந்துள்ளது. நந்திகமா, திருவுரு, விசனப்பேட்டா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்துவருகிறது. மும்பையில் இன்று (ஜூலை 27) அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை பெய்துவருவதன் காரணமாக மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளாக்காடாகி உள்ளன. ஆகையால் அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 38 பேர் பலி: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 38 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் அதிகாரிகள் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

உடுப்பி, தக்சின கன்னடா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் மாவட்ட துணை ஆணையர் வித்யாகுமாரி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

மீண்டும் அபாய எல்லையக் கடந்த யமுனை: தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய எல்லையைக் கடந்து 205.33 மீட்டர் என்றளவில் பாய்கிறது. நேற்று புதன்கிழமை டெல்லியில் பரவலாக கனமழை பெய்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட், இமாச்சலுக்கு அலர்ட்: இந்நிலையில், மழைப் பிரதேசங்களான இமாச்சல் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் இன்று (ஜூலை 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிம்லா வானிலை ஆய்வு மையத் தலைவர் சுரேந்தர் பால் கூறுகையில், சிம்லா, சோலன், சிர்மார், மாண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர், உனா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE