மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க அனுமதி - மக்களவை தலைவர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், நேற்று காலை மக்களவை கூடியதும், கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அமளி நீடித்ததால், மக்களவை தலைவர் ஓம் பிர்லா பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

பகல் 12 மணிக்கு அவை கூடியபோது, உறுப்பினர்களின் மேஜை மீது மசோதா நகல் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. அப்போது, நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் நோட்டீஸ் வழங்கி உள்ளதாக கூறிய ஓம் பிர்லா, இதற்கு யார் யார் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டார். சோனியா காந்தி, பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, சுப்ரியா சுலே உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.

விதிமுறைகளின்படி, 50-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்ததால், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக ஓம் பிர்லா தெரிவித்தார். அது எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இண்டியா கூட்டணியில் இடம்பெறாத பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சார்பில் தனியாக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே, கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு கூடியபோதும் இதை நிலை நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரை மக்களவையில் பேச வைக்கவே இத்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE