கார்கில் பகுதியில் முதல் முறையாக மகளிர் காவல் நிலையம் திறப்பு

By செய்திப்பிரிவு

கார்கில்: லடாக் யூனியன் பிரதேசத்தில் லே-வுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய நகரம் கார்கில். கார்கில் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் இல்லாமல் இருந்தது.

கார்கில் போர் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை ஏடிஜிபி சிங் ஜாம்வல் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது முக்கியமான நடவடிக்கை. இந்த காவல் நிலையம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த காவல் நிலையம் பெண்களுக்கு தேவையான உதவியை வழங்கும். மேலும், சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு இது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் மையமாகவும் செயல்படும்.

சட்டத்தை அமல்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு முக்கியம். கார்கிலில் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியான நடவடிக்கை. இதன் மூலம் பெண்கள், காவல் நிலையத்தை நம்பிக்கையுடன் அணுகி, தங்கள் பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘நன்கு பயிற்சி பெற்ற, அர்ப்பணிப்புடன் செயல்படும் பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்த காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இவர்களால் எளிதில் கையாள முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE