அரசு பிடியில் இருந்து கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும் - விஎச்பி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள கோயில்களை அரசு பிடியிலிருந்து விடுவித்து அறக்கட்டளைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என விஎச்பி பல ஆண்டுகளாக கூறி வருகிறது. சமீப காலமாக இதுபற்றி பேசாத விஎச்பி தற்போது மீண்டும் இதனை வலியுறுத்த தொடங்கியுள்ளது. இதுபோன்ற விவகாரங்கள் பற்றிவிவாதிக்க, வாரணாசியில் ‘கோயில்களுடன் இணைப்பு’ எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் விஎச்பியின் சர்வதேசப் பொதுச் செயலாளர் மிலிந்த் பராந்தே பங்கேற்று பேசியதாவது: இந்து கோயில்களின் சொத்துகள் இந்து மதத்திற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். இதன் வருமானங்களும் இந்துக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றுகூட பல பகுதிகளில் இந்து கோயில்களின் நிலங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க, அறக்கட்டளைகள் அமைத்து அவற்றிடம் கோயில்களை ஒப்படைப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

விஎச்பி நாடு முழுவதிலும் ‘உங்கள் கோயிலை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த மாதம் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கத்தில் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களுக்கான இணையதளம் தயாராகி வருகிறது.

சர்வதேச தங்கக் கவுன்சில்2015-ல் வெளியிட்ட புள்ளிவிவரத் தில் இந்தியக் கோயில்களில் 22,000 டன் எடையுள்ள தங்கக் கட்டிகளும் நகைகளும் இருப்பதாகத் தெரிவித்தது. இதுபோல் புராதனக் கோயில்கள் பலகோடி சொத்துகளை கொண்டிருப் பதாலும் விஎச்பி தனது பழைய கொள்கையை மீண்டும் வலியுறுத் தத் தொடங்கியுள்ளது.

ராமர்கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மட்டுமே, அயோத்தி கோயிலை நிர்வகிக்க வேண்டும் எனவும் விஎச்பி வலியுறுத்தத் தொடங்கி யுள்ளது.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை அடுத்த வருடம்ஜனவரியில் திறக்க முயற்சிக்கப்படுகிறது. இதற்கான அரசியல் பலன்பெற பாஜக தயாராகி வருகிறது. இச்சூழலில் மத்தியில் தலைமை ஏற்று ஆளும் பாஜகவின் தோழமை அமைப்பான விஎச்பியின் அறிவிப்பு சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE