எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே 6 சட்ட மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மக்களவையில் நேற்று 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதிதொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. 5-ம் நாளாகநேற்று மக்களவை கூடியது. அப்போதும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு நடுவே, மசோதாக்களை அறிமுகம் செய்யுமாறு உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயை ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதாவை அமைச்சர் நித்யானந்த் ராய் குரல் வாக்கு மூலம் அறிமுகம் செய்தார்.

பின்னர், ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதாக்களை நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் வீரேந்திர குமார் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர், அரசியல் சாசன (ஜம்மு காஷ்மீர்) பட்டியல் சாதி ஒழுங்கு (திருத்த) மசோதா, அரசியல் சாசன (ஜம்மு காஷ்மீர்) பழங்குடியினர் ஒழுங்கு (திருத்த) மசோதாக்களை அறிமுகம் செய் தனர்.

மேலும் சுரங்கம் மற்றும் தாதுப்பொருட்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிமுகம் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE