புதுடெல்லி: மக்களவையில் மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா இன்று (புதன்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இது நாட்டின் எல்லையிலிருந்து 100 கி.மீ., தொலைவுக்குள் உள்ள நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவும், வனப்பகுதியில் உயிரியல் பூங்கா, சஃபாரி மற்றும் சூழிலியல் சுற்றுலா அமைக்கவும் வழிவகை செய்கிறது.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை சிறிய விவாதத்துடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா தாக்கலின்போது பதில் அளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், "தற்போதைய சட்டத்தின்படி, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தின் மூலம் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிலிருந்து 100 கிமீ பரப்பளவில் உள்ள வனப்பகுதிக்கு விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல் நாட்டின் பாதுாகப்பு கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சீனா அருகே உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோடு, ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த உதவும்” என்றார். மேலும், நாடாளுன்ற கூட்டுக் குழு இம்மசோதாவை ஆய்வு செய்து முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, வன பாதுகாப்பு திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இக்கூட்டுக்குழு மே மாதம் மசோதா குறித்து மே மாதத்தில் மக்களிடம் கருத்து கேட்டிருந்தது. குழுவில் இருந்த நான்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதா குறித்த தங்களின் எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து திருத்தங்களுக்கும் அனுமதி அளித்திருந்தது.
» “இனி என் மகளே இல்லை...” - பாகிஸ்தான் நபரை மணந்த அஞ்சுவின் தந்தை ஆவேசம்
» ‘2023ல் நம்பிக்கையில்லா தீர்மானம்...’ - 2019ல் பேசிய பிரதமர் மோடி - வைரல் வீடியோ
மக்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதிலாக, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக இருந்த பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால் சபையை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் மணிப்பூர் பிரச்சினை குறித்த எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானம்: இதற்கிடையில், மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்தார். இதுதொடர்பாக அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 பின்னணி: இந்தியாவின் காடுகளைப் பாதுகாப்பதற்காக 1980இல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டம், காட்டு வளங்களைத் தொழில் நிறுவனங்களும் காடுகளில் வாழும் சமூகங்களும் தமது பயன்பாட்டுக்காகப் பிரித்தெடுப்பதை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
1951இலிருந்து 1975க்குள் கிட்டத்தட்ட 40 லட்சம் ஹெக்டேர் காட்டு நிலங்கள் காடு சாராத நோக்கங்களுக்காக மடைமாற்றப்பட்டிருந்தன. வனப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்குவந்தது முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இது 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. காட்டு நிலங்கள் பிற பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதை இந்தச் சட்டம் கணிசமாகத் தடுத்துள்ளது என்பதற்கு இதுவே சான்று. ஆனால், இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசுகளின் பதிவுகளில் ‘காடு’ என்று வகைப்படுத்தப்பட்டிருந்த நிலப் பகுதிகளுக்கு மட்டுமே பாதுகாப்பளித்தது.
1996இல் கோதாவர்மன் எதிர் மத்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய நிலத்தின் வரையறையை விரிவுபடுத்தியது. அதன்படி, ‘அதிகாரபூர்வக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், ‘சொல் அகராதி’யின்படி காடு என்று பொருள் கொள்ளத்தக்க நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகின.
காடு என்பதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வரையறை எதுவும் இல்லை என்பதால், மாநில அரசுகள் தமது அளவுகோல்களைப் பயன்படுத்தி, காடுகளை வரையறை செய்து எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கூறியது. அனைத்து மாநிலங்களும் இதைப் பின்பற்றவில்லை என்பதால் காடுகளைப் பாதுகாப்பதில் மேற்கூறிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்குப் பங்களித்துள்ளது என்பது விவாதத்துக்குரியதாக இன்றுவரை தொடர்கிறது.
நாட்டின் புவியியல் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என்று 1988இல் வெளியிடப்பட்ட இந்தியாவின் வனக் கொள்கை பரிந்துரைக்கிறது. ஆனால், 21% நிலம் மட்டுமே காட்டுப் பகுதியாக உள்ளது. காடுகளாகப் பதிவுசெய்யப்பட்ட நிலங்களுக்கு அப்பால் உள்ள மரங்கள் நிறைந்த பகுதிகளையும் பழத்தோட்டங்களையும் சேர்த்தால் 24% வரும். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குத்தான் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கியத் திருத்தங்கள்: காடுகளையும் அவற்றின் உயிர்ப்பன்மையையும் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிப்பது ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிடும் வகையிலான முகவுரை இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பெயர் ‘வன் (சம்ரக்ஷண் ஏவம் சம்வர்த்தன்) அதினியம்’ என்று மாற்றப்பட்டுள்ளது (வனப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பது இதன் பொருள்).
1980 அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அரசு ஆவணத்தில் ‘காடு’ என்று அறிவிக்கப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1980இலிருந்து 1996க்குள் காடு என்று அறிவிக்கப்பட்ட நிலம், சட்டப்படி காடு சாராத பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் வனப் பாதுகாப்புச் சட்டம் அதற்குப் பொருந்தாது.
சர்வதேச எல்லையிலிருந்து 100 கி.மீ-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள காட்டு நிலங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வியூகம்சார் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான காட்டு நிலங்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவத் திட்டங்களுக்கான 5-10 ஹெக்டேர் வரையிலான நிலங்களுக்கு இந்தச் சட்டத்தின் நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
எதிர்ப்புகளின் பின்னணி: நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர்களில், 18 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். மசோதாவில் குறிப்பிட்ட நிலப் பகுதிகளைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கிவைப்பது இமயமலை, இமயமலை தாண்டிய (Trans himalaya), வடகிழக்குப் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான காடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது முக்கியமான ஆட்சேபங்களில் ஒன்று.
உரிய மதிப்பீடு மற்றும் மீட்புத் திட்டங்கள் இல்லாமல் இந்தக் காடுகளில் உள்ள மரங்களை அகற்ற அனுமதிப்பது சூழலியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உயிர்ப்பன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வித்திடும் என்று அஞ்சப்படுகிறது.
சட்டத்தின் வரம்பினை 1980 அக்டோபர் 25 அல்லது அதற்குப் பின்னர் காடுகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் என்று சுருக்குவதானது குறிப்பிடத்தக்க காட்டு நிலத்தையும் பல்வேறு உயிர்ப்பன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் காடு சாராத நோக்கங்களுக்காக விலைக்கு விற்கப்படுதல், மடைமாற்றப்படுதல், மரங்கள் அகற்றப்படுதல், சுரண்டப்படுதல் ஆகியவற்றுக்கு உட்படுத்தும் என்பது இந்த மசோதா எதிர்க்கப்படுவதற்கான இன்னொரு முக்கியக் காரணம்.
சட்டத்தின் பெயரை சம்ஸ்கிருதமயமாக மாற்றியிருப் பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் கோதாவர்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். காடுகள் பாதுகாப்பு என்பது மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டின் அதிகாரத்துக்கும் உள்பட்டது என்றும், இப்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிப்பதாகவும் சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமைச்சகத்தின் எதிர்வினை: சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ஆட்சேபங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை அளித்துள்ளது. கோதாவர்மன் தீர்ப்பை மசோதா நீர்த்துப்போகச் செய்யவில்லை என்றும் நிலங்கள் ‘தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை’ உறுதிப்படுத்துவதற்கு மசோதாவில் உரிய ஏற்பாடுகள் இருக்கின்றன என்றும் அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லைகளுக்கு அருகே உள்ள நிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு அனைத்துக்கும் பொருந்துவது அல்ல என்றும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ‘வியூகம்சார் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட திட்டங்களுக்கு’ மட்டுமே அது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலக்குகள் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. | நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago