அமித் ஷா கடிதமும், மோடியின் அணுகுமுறையும்... - முரண்களை முன்வைத்து கார்கே பதில் கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடைவெளியிருப்பது தெரியும். இந்த இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கடிதத்துக்கு எழுதிய பதிலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நான்கு நாட்கள் அலுவல்கள் நடைபெறாமல் முடங்கியன. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரினை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை பதில் கடிதம் எழுதியுள்ளார். அதனைத் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "ஒரு நாளில் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், தீவிரவாத குழுக்களுடனும் பிரதமர் ஒப்பிட்டு பேசுகிறார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக உருக்கமாக கடிதம் எழுதுகிறார். நீண்ட காலமாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது தெரியும். இப்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி ஏற்பட்டிருப்பது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளை திக்கற்றவர்கள் என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டும் இல்லை, துரதிர்ஷ்டவசமானதும் கூட. பிரதமர் அவைக்கு வந்து மணிப்பூர் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறேம். அப்படிச் செய்வது அவரின் மரியாதையை புண்படுத்தும் என்று பிரதமர் கருதுகிறார். நாட்டு மக்களிடம் எங்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு உள்ளது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: "நாடாளுமன்றத்தில் அரசின் அணுகுமுறை உங்களின் கடிதத்துக்கு மாறாக தன்னிசையான உணர்வுடன் இருக்கிறது. இது ஒன்று புதியது இல்லை. எதிர்க்கட்சிகள் இதுபோன்ற அணுகுமுறையை பல கூட்டத் தொடர்களில் பார்த்திருக்கின்றன.

கூட்டத்தொடர் முழுவதும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை உருவாக்குகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று தினந்தோறும் நோட்டீஸ் அளிக்கின்றனர். ஆனால், அரசு அதை நிராகரிக்கிறது. அவைத் தலைவரின் அனுமதிக்கு பின்னர் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேச எழும்போது, சபையின் தலைவர் அவரைத் தடுக்கிறார். ஆனாலும், அவையில் விவாதம் நடக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூடுகின்றனர். அனைத்தையும் கடிதத்தில் வெளிப்படுத்துவது எளிது. சொல்வதைப் போல செயல்பட்டு எளிதாக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையையும் பெறலாம்.

நீண்ட காலமாக நாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வரலாற்றில் இடம்பெறும் என்று நாம் அறிவோம். வருங்கால சந்ததிகளுக்கு நாம் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் உரிமைக்காக நாம் போராடினோம் என்று அவர்களிடம் கூற முடியும். நாடாளுமன்றம் அமைதியான முறையில் நடக்கவேண்டும் என்று ஆளும் தரப்பு விரும்பினால், அதற்கான எளிய வழி அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பதே" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

அமித் ஷா கடிதம்: முன்னதாக அமித் ஷா தனது கடிதத்தில், "மணிப்பூர் விவகாரத்தில் அரசிடமிருந்து ஓர் அறிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. வெறும் அறிக்கை மட்டும் இல்லை, ஒரு முழுமையான விவாதத்துக்கு அரசு தயாராக இருக்கிறது என்று நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால், அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வேண்டும். நல்ல ஒரு சூழலில் விவாதம் நடத்த முன்வரவேண்டும் என்று உங்கள் மூலம் நான் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதத்துக்கு ஏற்பு

பிரதமர் விமர்சனம்: முன்னதாக, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறாது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.

தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்