பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது I.N.D.I.A-வுக்கு எப்படி நம்பிக்கை வரும்?- கபில் சிபல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது I.N.D.I.A-வுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி ஆலோசித்த நிலையில் அது குறித்து கபில் சிபல் இவ்வாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம். பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க நம்பிக்கை இல்லை. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மவுனம் காக்கிறார். பிரிஜ் பூஷண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்துகூறும் வரை அமைதியாகத்தான் இருந்தார். சீனாவால் இந்தியாவின் எப்பகுதியும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றார். இப்படியெல்லாம் நடக்கும் பிரதமர் மீது I.N.D.I.A நம்பிக்கை கொள்வது எப்படி?" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக கிண்டல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தால் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக கிண்டல் செய்த நிலையில், ‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE