எதிர்க்கட்சிகளின் திசை இல்லாத பயணம்: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் பயணத்துக்கு திசையே இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். மீதமுள்ள காலத்தை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துங்கள். வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் நாம்தான் வெற்றி பெறுவோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஆட்சியின்போதும் எதிர்க்கட்சிகள் நம் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால் அதன் பிறகு 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் நம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 282-லிருந்து 303 ஆக அதிகரித்தது. அதுபோல இந்த ஆண்டும் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும். நாம் 350-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம்.

இப்போது நடப்பது போன்ற திசையே இல்லாத எதிர்க்கட்சிகளின் பயணத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இதைப் பார்த்தால், நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்ற மனநிலையை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயரில் இந்தியா என்ற நாட்டின் பெயரை சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. வெளிநாட்டினரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கு இந்திய கம்பெனி ஆகியவற்றின் பெயரில் ‘இந்தியா’ உள்ளது.

இதுபோல பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்தியன் முஜாகிதீன் ஆகிய தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பெயரிலும் ‘இந்தியா’ உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயர் சூட்டி உள்ளனர். இந்தியா என்ற நாட்டின் பெயரை சேர்த்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதால் மட்டும் நாட்டு மக்களை திசைதிருப்ப முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE